தமிழில் ஓர் தரமான பாய்ச்சல் சுழல் வெப்சீரிஸ். புஷ்கர் காயத்ரி எழுத்தில் பிரம்மா & அணுசரன் இயக்கத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரா.பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் அமேசான் ப்ரேம் நேரடியாக தயாரித்துள்ள இந்த சீரிஸின் கதை மிகவும் சீரியஸான கதை. அவசியம் பேசப்பட வேண்டிய கதையும் கூட
கதையின் முதல்வரியைச் சொன்னாலும் அது சீரிஸின் முகவரியைப் பாதிக்கும் என்பதால்..கதையை அப்படியே விட்டுவிடலாம். ஆனால் இந்த வெப்சீரிஸை நிச்சயமாக குடும்பத்தோடு பார்க்க வேண்டும் என்பதை மட்டும் முதலிலே சொல்லி விடலாம்
கதிரின் கரியரில் This is one of the best எனலாம். மிகவும் செட்டில் ஆன நடிப்பை கொடுத்துள்ளார். கோவை மாவட்டம் சாம்பலூரில் ஒரு போலீஸ் எஸ்.ஐ இப்படித்தான் இருப்பார் என அப்படியே நம்ப வைக்கிறார் கதிர். அவர்போலவே சற்றும் வீரியம் குறையாமல் நடித்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி. ரா.பார்த்திபன் அழுத்தமான கேரக்டரில் அம்சமாக நடித்துள்ளார். மகள்கள் மற்றும் மனைவியை தான் சரியாக புரிந்துகொள்ள வில்லை என்று அவர் உடையும் இடத்தில் தடம் பதிக்கிறார் ரா.பா. ஐஸ்வர்யா ராஜேஷ் மிக அட்டகாசமான நடிப்பால் சீரிஸுக்கு பலம் சேர்த்துள்ளார். ஆச்சர்யமான ஆச்சர்யம் நடிகை லதாராவின் நடிப்பு. கோவை ஸ்லாங்கில் அவர் பேசும் வசனங்களும் அவரது ஓர் எமோஷ்னல் சீனும் சுழலுக்குள் ஓர் சுழலை ஏற்படுத்துகிறது. நல்ல நல்ல கதாப்பாத்திர தேர்வுகளால் சுழல் வெப்சீரிஸ் வெற்றிக்கொடி நாட்டி நிற்கிறது. ஹரிஸ் உத்தமன், ஓர் திருநங்கை என ஒவ்வொரு கேரக்டர்ஸும் நச் ரகம். நிலா என்ற கேரக்டரில் வரும் சீரிஸின் மையப்பாத்திரம் நடிப்பிலும் அத்தனை காத்திரம்.
ஒரு இன்வெஸ்டிகேஷன் (கதை சொல்லல) பாணியில் துவங்கும் சீரிஸ் ஒவ்வொரு எபிசோடிலும் திரை தீப்படிக்க சுழண்டடிக்கிறது. இந்த சீரிஸின் ஆகச்சிறந்த அம்சமே ரைட்டிங் தான். பேப்பரில் ஒரு கதை காத்திரமாக உருவாகி விட்டால்..அந்த கதையைத் தாங்கும் பாத்திரங்களும், மேக்கிங்கும் அந்த கதையை வேறோர் தளத்திற்கு எடுத்துச் செல்லும் இல்லையா? அந்த மாயாஜாலம் சுழலில் நடந்துள்ளது.
கதையைத் துருத்தாத அளவில் சீரிஸில் அங்கங்கே அரசியல் பேசியிருப்பதும் ரசனையான அனுபவம். ரா.பார்த்திபன் ஓர் நாத்திகவாதி.மார்க்ஸ், பெரியார் ஆகிய முற்போக்கர்களை வாசிப்பவர். ஆனால் அவர் இறையனுபவமே வேதம் என வாழும் தன் மனைவியிடம், “உங்களை நான் புரிஞ்சிக்கல” என மனமுடைகிறார். ஆக்ஷுவலா கம்யூனிசம் பெரியாரிசம் பேசுறவுக..நடைமுறையில் அப்படி இருப்பதில்ல” என்பதை நிறுவியுள்ளார்கள். மேலும் படத்தின் டெக்னிக்கல் டீம் வெறிகொண்டு வேலை செய்திருக்கிறது. சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை சீரிஸின் தரத்தை பலமடங்கு முன் நகர்த்துகிறது. மேலும் ஒளிப்பதிவாளர் மிரட்டியிருக்கிறார். மயானக்கொல்லை எனப்படும் நிகழ்வை இவ்வளவு நேர்த்தியாக யாரும் எந்தப்படைப்பிலும் பதிவு செய்யவில்லை. அந்த வகையில் ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஸ்பெசல் பூங்கொத்து
ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வோர் முடிச்சு என பயணித்து முடிவில் ஆஹா என பெருமூச்சு விட வைத்து அனுப்புகிறது சுழல்
இந்த சீரிஸில் ஒரு முக்கியமான மெசேஜ் இருக்கிறது. அதை மனதில் வாங்கிப் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்காக இந்த சீரிஸை அனைவரும் பார்க்கவேண்டும்
-மு.ஜெகன் கவிராஜ்