தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட நாயகர்களுக்கு மட்டும் தான் தமிழகம் தாண்டி பிற மாநிலங்களிலும் சொல்லிக் கொள்ளும்படியான மார்க்கெட் உண்டு. அப்படிப்பட்ட நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். இவருக்கு தமிழ்நாட்டில் எந்தளவிற்கு ரசிகர்கள் பட்டாளமும், மார்க்கெட்டும் இருக்கிறதோ அதே அளவிற்கு தெலுங்கு ரசிகர்களும் தெலுங்கு மார்க்கெட்டும் உண்டு. அதே போல் ஓரளவிற்கு மலையாளத்திலும் அவருக்கு ரசிகர்கள் உண்டு.
இதனால் பெரும்பாலும் இவரது படங்கள் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்படும். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் “சூரரைப் போற்று” திரைப்படத்தின் மூலம் அவர் கன்னடத்திலும் நேரடியாக கால்பதிக்கவிருக்கிறார். இதுவரை பெரும்பாலும் தமிழ்ப்படங்கள் கர்நாடகாவில் அப்படியே தான் வெளியாகும். பெரும்பாலான மக்களுக்கு தமிழ் புரியும் என்பதால் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது இல்லை. ஆனால் முதன்முறையாக சூர்யாவின் “சூரரைப் போற்று” மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் படம் வெளியாகும் அதே நாளான ஏப்ரல் 9 அன்று வெளியாகவிருக்கிறது.