சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா-அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று படத்தின் ஒரு பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியீட்டில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார், “சூர்யாவை எல்லோரும் பதுங்கும் புலி என்று நினைக்கிறார்கள்; அவர் பாயும் புலி, அவர் எனக்குக் கிடைத்த அரிய சொத்து, நான் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் என் குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகர் வருவார் என்று நினைக்கவில்லை. இப்படத்தின் இயக்குநர் மணிரத்னத்தின் உதவியாளர்.
இப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுத் தரும். அது போல் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் வருங்காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரைப் போல் மிகச்சிறந்த இசையமைப்பாளராக வர வேண்டும் என்று இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.” என்று பேசினார். இப்படத்தில் ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப் மற்றும் மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.