நாவல்களைத் திரைப்படமாக எடுக்கும் போக்கு முன்பு தமிழ்சினிமாவில் இருந்தது. பாலச்சந்தர், மகேந்திரன், பாலு மகேந்திரா போன்ற இயக்குநர்கள் இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது இருக்கும் இளம் இயக்குநர்கள், வளர்ந்து வரும் இயக்குநர்கள் யாருமே இலக்கியம் சார்ந்து ஒரு திரைப்படத்தை எடுக்கத் துணிவதில்லை. இதில் இயக்குநர் வெற்றிமாறன் மட்டும் விதிவிலக்கு.
அவரது ஆடுகளம், விசாரணை, அசுரன் ஆகிய படங்கள் நாவல்கள் மற்றும் சிறுகதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டவை. தற்போது தனது அடுத்த படத்தில் சூர்யாவை இயக்கப் போகும் வெற்றிமாறன் இப்படத்திற்கான மூலக்கதையையும் நாவலில் இருந்தே எடுக்கவிருக்கிறார். மீரான் மைதின் எழுதிய அஜ்னபி நாவலை மையமாகக் கொண்டு இதன் திரைக்கதையை அமைக்கவிருக்கிறார். இப்படம் குறித்துப் பேசிய வெற்றிமாறன், “அரபு சிறை ஒன்றில் மாட்டிக் கொண்டு நாளை தூக்கிலிடப்படவிருக்கும் மனிதன் ஒருவன் தன் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதுகிறான்.” இதுதான் அப்படத்தின் ஒற்றைவரிக்கதை. இதில் அரபுச் சிறையில் சிக்கிக் கொள்ளும் மனிதராக சூர்யா நடிக்கவிருக்கிறார்.