Tamil Movie Ads News and Videos Portal

சூரரைப் போற்று என் பெருமிதம்- சூர்யா

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்களில் ஒன்றான ‘வெய்யோன்சில்லி’ என்று தொடங்கும் பாடலை நடுவானில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் மற்றும் சூர்யா இருவரும் வெளியிட்டனர்.

இதுகுறித்து நடிகர் சூர்யா கூறியதாவது :-

“எனது 20 வருட சினிமாவில் இந்த படத்தை தான் முக்கியமாக கருதுகிறேன். இப்படம் சிறப்பாக வருவதற்காக இயக்குநர் சுதா 10 வருடங்கள் உழைத்திருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல.

மேலும், சுமார் 30 நிமிட காட்சிகள் விமானத்தில் எடுக்கப்பட்டது. அதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் உள்பட படப்பிடிப்பின் போது எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஒவ்வொருவருக்கும் நன்றி.

கண்டுபிடிப்புகள் எப்படி முக்கியமோ அதைவிட பொதுமக்களுக்கு அது எந்தளவு உபயோகமாக இருக்கிறது என்பதும் முக்கியம். அந்த சிறப்பான செயலை கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் செய்துள்ளார். ஒரு காலத்தில் இந்திய மக்கள் தொகையில் 1% மக்கள் தான் விமானத்தை

உபயோகபடுத்தினார்கள். அப்படிப்பட்ட காலகட்டத்திலேயே ரூ.1/- கட்டணத்தில் சாதாரண மனிதரையும் பறக்க வைத்து விமானத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து சாதனை புரிந்தவர் ஜி.ஆர்.கோபிநாத். அப்படிப்பட்டவரின் வாழ்க்கையைக் கூறும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக பெருமிதமடைகிறேன்” என்றார்