Tamil Movie Ads News and Videos Portal

சுளுந்தீ -ஒரு புத்தகம்/ ஒரு பார்வை

எல்லா மருத்துவ பண்டுவமும் தெரிஞ்ச அரண்மனை நாவதன் ராமன் தன் மகனை படைவீரனாக்க ஆசைப்படுதான். “ஒரு நாவிதன் எப்படி படைவீரனாக முடியும்?” குலத்தொழிலை தாண்டி வேற தொழில்.. குறிப்பா வீரத்தொழில் நாவிதனுக்கு கிடையாதுப்பான்னு ராமன் மண்டையில நங்னு அடிச்சி உணர்த்தது அரசும் அதிகாரமும். அந்த உணர்த்துதலோட விதம் புடிக்காத ராமனின் மகன் மாடன் வீரனாகவே மாறுறான். அரண்மனையோட கோபமும் மாடன் வீரமும் என்னமாதிரியான முடிவை எட்டுது என கதை விரியுது. இது மிகச்சிறிய கதைச் சுருக்கம். இந்தப் பெருங்கதைக்குள்ள எண்ணமுடியாத கிளைக்கதைகள் பெருக்கெடுத்து வைகை நதியாட்டம் ஓடுது

ஒரு சமூகத்தில் நாவிதர்களின் பங்களிப்பில் என்னவெல்லாம் இருக்குன்னு அறியும் போது இப்போதுள்ள தலைமுறைக்கு பெரும் மலைப்பே ஏற்படும். எங்க ஊர்ல ஒரு குடும்பத்துக்கு ஒரு நாவிதர் உண்டு. எங்க குடும்பத்துக்கு மாடசாமின்னு ஒருத்தர் இருந்தார். மாசத்துல எதாவது ஒரு சனி ஞாயிறு வந்து நின்னு எங்க தலையை தடுவுவாரு. “வாரும்யா ரசினி மாதிரி வெட்டிருவோம்”னு சொல்லி புளிய மர நிழல்ல உக்கார வச்சி தண்ணியத் தடவும் போது மண்ட குளுகுளுன்னு இருக்கும். இந்த நாவல் அதையெல்லாம் நியாபகப்படுத்திச்சு. எங்கூர் ஓடை வழியே கழுதை மேல பெரிய துணி பொதியைக் கட்டி வண்ணாக்குமாரு குடும்பத்தோட குளத்துக்கும் கால்வாய்க்கும் வெளுக்கப் போற காட்சியும் நூல் வழியா கண்ணுல வந்து போச்சுது.. எந்தத் குலத்து துணியோட எந்தக் குலத்துத் துணியைச் சேக்கக்கூடாதுன்ற கட்டுப்பாடுலாம் பயங்கரம். குலநீக்கமான மக்களுக்கு இழைக்கப்பட்ட துயரம், பஞ்ச காலத்துல அரசு போடுற வேசம், சித்த மருத்துவத்தோட அதியற்புத தகவல்கள் என இந்த நாவல் மிக முக்கியமான பொக்கிசம். இந்நாவலுக்குள் இருக்கும் ஆசிரியர் இரா.முத்துநாகு அவர்களின் உழைப்பு வணக்கத்துக்குரியது

கொடைக்கானல், பழனி, வேடசந்தூர் பகுதிகளை அப்போ கன்னிவாடின்னு சொல்வாங்க. அந்தக் கன்னிவாடியை நிர்வகிக்கிறார் கதிரியப்ப நாயக்கர் எனப்படும் அரண்மனையார். (1962-1982)

அவரோட வாஞ்சையில தான் மகா பண்டுவனான ராமன் இருக்கிறான். அந்த ராமன் மேல அரண்மனையாருக்கு கரிசனம் உண்டு. ஆனா அதுக்குப் பின்னாடி சூதும் உண்டு. வன்மமே துணையான தளபதி, எந்த வெஞ்சினமும் அறியாத ராமன் பொண்டாட்டி வல்லாத்தாரை, மகாவீரன் மாடன், மக்கள் படையை ஒன்றாக்க நினைக்கும் மருதமுத்து ஆசாரி, ஜக்கமய்யன், நாவிதன் பெருமாள், அனந்தவல்லி என நிறைய மனிதர்கள் நாவலில்.

கன்னிவாடி பகுதியில் உள்ள பன்றிமலையில் சித்தர் இருந்து மக்களுக்கு பண்டுவம் சொல்லும் காட்சிகள் எல்லாம் நாவலின் அடிப்பொலி ஏரியா.சவரக்கத்தி போர்வாளுக்கு சற்றும் குறைந்ததல்ல என்பதையும், வீரனை கொல்ல முடியும், வெல்ல முடியாது என்பதையும் ஆழப்பதிய வைத்தது நாவல். பதிநான்கு நாட்களாக கன்னிவாடி அரண்மனை ஏரியாவிலும், பன்றிமலையிலும் குடியிருந்த உணர்வை கொடுத்தது சுளுந்தீ❤️