குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மற்றும் தேசிய குடியுரிமை பதிவு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் மக்களின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களின் எதிர்ப்பை ஏதோவொரு வகையில் பதிவு செய்து வருகின்றனர். அதன்படி சில தினங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கேரளாவைச் சேர்ந்த ரபீக்கா என்ற மாணவி தனக்கு வழங்கப்படவிருந்த தங்கப் பதக்கத்தை
பெற மறுத்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அது போல் மேற்கு வங்க மாநிலம் ஜாதல்பூர் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் டெபோஸ்மிதா சவுத்ரி என்ற மாணவி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் நகலை மேடையில் கிழித்தெறிந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தற்போது சென்ற ஆண்டு திரைப்படங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் இந்த ஆண்டு கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சென்ற ஆண்டு சிறந்த மலையாளத் திரைப்படத்திற்கான விருதைப் பெற்ற “சூடானி ஃப்ரம் நைஜீரியா” என்ற படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த விருதை வாங்காமல் படக்குழு புறக்கணித்திருப்பதன் வாயிலாக தங்களது எதிர்ப்பை அப்படக்குழு பதிவு செய்திருக்கிறது.