YNOT ஸ்டுடியோ படத்தயாரிப்பில் பத்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. அது குறித்து அந்நிறுவனம் வெளியீட்டிருக்கும் செய்திக்குறிப்பு:
“ஒரு திரைப்பட தயாரிப்பு ஸ்டுடியோவாக, வித்தியாசமான திரைப்படங்களைத் தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனமாக, ஒரு தனித்துவமான பேனராக ஒரு தசாப்தத்தை நாங்கள் நிறைவு செய்திருக்கிறோம். 2010 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்தால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் இந்த ஜனவரி மாதம் 2020ல் தனது பத்தாம் ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்த பத்து ஆண்டுகளில், 18 திரைப்படங்களைத் தயாரித்திருக்கும் இந்நிறுவனம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தயாரிப்புகளை உள்ளடக்கிய மிகச் சில தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக முன்னிலை பெற்று சிறந்து விளங்குகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான், ராஜ்குமார் ஹிரானி, ஆனந்த் எல் ராய் போன்ற தொழில்துறையில் சில சிறந்த ஆளுமைகள் மற்றும் திறமைகளின் ஒத்துழைப்புடன் படைப்புகளை உருவாக்கிய நிகரற்ற அனுபவத்தையும் பெற்றிருக்கிறோம்.
எங்களது முதல் தயாரிப்பாக 2010 ஆம் ஆண்டில் நடிகர் சிவா கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கிய இந்தியாவின் முதல் முழு நீள ஸ்பூஃப் படமாக ‘தமிழ்படம்’ வெளிவந்தது. இப்படம் எங்கள் பேனரிலிருந்து பார்வையாளர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கான தொனியை அமைத்து தந்தது. இப்படம் சுவாரஸ்யமான மாறுபட்டதொரு கண்ணோட்டத்துடன் அமைந்த வேடிக்கையான படம்; YNOT ஸ்டுடியோஸ் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பயனுள்ள கதைகளை உருவாக்குவதை தனது கோட்பாடாகக் கொண்டது என்பதை பார்வையாளர்கள் இதன் மூலம் உணர்ந்து கொண்டார்கள்.
எங்கள் வெற்றிகரமான தயாரிப்புகளில் பாலாஜி மோகன் இயக்கத்தில் இருமொழிகளில் உருவான காதல்-நகைச்சுவைத் திரைப்படங்களாக, ‘காதலில் சொதப்புவது எப்படி’(2013) மற்றும் ‘வாயை மூடி பேசவும்’(2014) ஆகியவை அடங்கும். இவ்விரண்டு படங்களும் புதிய அணுகுமுறை மற்றும் புதுமையான கதைகளுக்கு விமர்சகர்களால் வரவேற்கப்பட்டது. வசந்தபாலனின் புராணகால நாடகமான ‘காவியத்தலைவன்’(2014), மற்றும் சுதா கொங்கராவின் விளையாட்டை மையமாகக் கொண்ட ‘இறுதி சுற்று’(2016) ஆகிய படங்கள் மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டது. அடுத்த தயாரிப்பான கிரைம் படம் ‘விக்ரம் வேதா’(2017) வணிகரீதியாகவும், மிகவும் பிரபலமானதாகவும், அந்த ஆண்டின் வெற்றிகரமான, சிறந்த விமர்சனங்களை வென்ற படமாகவும் திகழ்ந்தது. மேலும், 2017 ஆம் ஆண்டின் நம்பர்-1 படமாக விக்ரம் வேதாவை ஐஎம்டிபி மதிப்பீடு செய்தது. நகைச்சுவை திரைப்படம் ‘ஷுப் மங்கல் ஸாவ்தான்’(2017), மற்றும் ‘கேம் ஓவர்’(2019) ஆகியன விமர்சனரீதியான பாராட்டையும், வணிகரீதியில் வெற்றிப்படங்களாகவும் பெயர் பெற்றிருந்தன.
2018 ஆம் ஆண்டில், அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் AP இண்டர்நேஷனல் ஆகியவற்றுடன் இணைந்து, அனைத்து மொழிகளிலும் திரைப்படங்களைத் தயாரித்து, விநியோகிக்க, ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கினோம்.
அதனைத் தொடர்ந்து, YNOTX என்ற பெயரில் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம் செய்வதில் முனைப்புடன் செயல்பட்டோம். இதன் மூலம் ‘தமிழ்படம் 2’(2018), ‘சூப்பர் டீலக்ஸ்’(2019), ‘கேம் ஓவர்’(2019) மற்றும் ‘வானம் கொட்டட்டும்’(2020) போன்ற பல மாறுபட்ட உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களை விநியோகித்தோம். துடிப்பான செயல்பாடுகளைக் கொண்ட சந்தைப்படுத்தல் பிரிவு பல மதிப்புமிக்க திட்டங்களின் விளம்பரங்களை செயல்படுத்தி வருகிறது. 2019 ஆம் ஆண்டில், ‘YNOT மியூசிக்’ என்ற பேனரில் இசை உலகில் எங்கள் பயணத்தை துவங்கியுள்ளோம். எதிர்காலத்தில் மிகவும் உற்சாகமான இசை ஆல்பங்களை வெளியிட இருக்கிறோம்.
இந்த பத்தாம் ஆண்டு நிறைவில், எங்கள் படைப்புத்திறனை நம்பி, இந்த புதிய அணியுடன் பரிசோதனை அடிப்படையில் இணைந்து பணியாற்ற முன்வந்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
எங்கள் பங்குதாரர்கள், சக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், இசை லேபிள்கள், இயக்குநர்கள், இசைக்கலைஞர்கள், நடிக-நடிகையினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், சேவை வழங்குநர்கள், மக்கள் தொடர்பாளர்கள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மற்றும் இதுவரை எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பாக இந்தியாவில் “புதிய சிந்தையில் சினிமா” திட்டங்களை உருவாக்கும் ஒரு முன்னோடியாக அங்கீகரிக்கப்படுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், நன்றியுடன் இருக்கிறோம்.
“நாங்கள் ஊக்கமளிக்கும் புத்துணர்ச்சிமிக்க சினிமாவை உருவாக்க எதிர்நோக்கியிருக்கும் இந்த நேரத்தில், முன்னோக்கி செல்லும் பாதை எப்போதும் போல் உற்சாகமாகவே இருக்கிறது. இந்த பயணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். கடின உழைப்பு, விடாமுயற்சி, சிறப்பம்சங்கள் நிறைந்த புதிய கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கான தன்முனைப்பு ஆகியவற்றை நீங்கள் பாராட்டும் விதம் எங்களை இன்னும் பெரிதாக கனவு காணத் தூண்டுகிறது. இந்த ஆண்டு ‘D40’, ‘மண்டேலா’ மற்றும் ‘ஏலே’ திரைப்படங்களை YNOT ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் நீங்கள் எதிர்பார்க்கலாம்.” – எஸ். சஷிகாந்த், நிறுவனர், YNOT குழுமம்.