உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் கொரோனா பீதியில் வீட்டுக்குள் முடங்கிப் போயிருக்கிறார்கள். இந்த நிலை பலருக்கு ஒரு சரித்திர நிகழ்வாக மாறியிருக்கிறது. அதன் சாட்சியங்களாக தாங்கள் நின்று கொண்டிருக்கிறோம் என்கின்ற எண்ணம் பலரை குதூகலப்படுத்தினாலும், அதில் தினக்கூலிகளாக வாழ்ந்து வரும் மனிதர்களின் நிலை சொல்லி மாளாது. கையிருப்பு நிதி கரைந்து வரும் நிலையில் அடுத்த வேளை உணவிற்காக மீண்டும் கொரோனா பிடியில் சிக்கக் கூட தயாராக இருக்கும் மனநிலைக்கு அவர்கள் மாறி வரும் நிலையில் அது போன்ற தொழிலாளர்களைக் காக்க அரசு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது போன்ற தொழிலாளர்கள் எல்லாத் தொழிலிலும் இருக்கிறார்கள்.
பல கோடிகள் புழங்கும் தொழிலான சினிமாத்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல.இதில் இருக்கும் பெப்சி தொழிலாளர்களில் பலர் தினக்கூலி தான். அவர்களுக்கு உதவுங்கள் என்று பெப்சி தலைவர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, சிவக்குமார் தன் குடும்பத்தின் சார்பாக 10 இலட்சம், சிவகார்த்திகேயன் 10 இலட்சம், நடிகர் ரஜினிகாந்த் 50 இலட்சம், விஜய் சேதுபதி 10 இலட்சம், நடிகர் பிரகாஷ்ராஜ் 25 கிலோ அரிசி மூட்டைகள் 150, தயாரிப்பாளர் தாணு 25 கிலோ அரிசி மூட்டைகள் 250, ஆடுகளம் நரேன் 25,000ரூபாய், நண்டு ஜெகன் 5000 ரூபாய் வழங்கியுள்ளனர். இன்னும் சிறு சிறு நடிகர்கள் முதற்கொண்டு பலரும் இந்த இக்கட்டான சூழலில் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.