ஒரு காரு..அந்த காருக்கு ஓனர் யாரு? என்ற லைனை வைத்து ஒரு சிரிப்பு ட்ராவல் நடத்தியிருக்கிறது இந்தச் சொப்பன சுந்தரி
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு படுக்கையில் கிடக்கும் அப்பா, பேச்சுத்திறன் இல்லாத அக்கா, கடன்கார அம்மா, பொறுப்பற்ற அண்ணன். இத்தனைக்கு நடுவில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தன் அக்காவை கரையேற்றும் பரிசாக வந்து சேர்கிறது ஒரு நியூ கார். அந்தக் காருக்குள் ஒரு பிணமும், அந்த காரை வைத்து சிலபல பேரங்களும் இருக்க..முடிவில் சொப்பன சுந்தரி யாருக்கு? என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறது படம்
ஐஸ்வர்யா ராஜேஷ் தான் ஏற்றுக்கொண்ட அகல்யா கேரக்டருக்கு அகல் விளக்கு ஏற்றி ஒளி தந்துள்ளார். அந்தக் கேரக்டர் தனித்துவமாக மின்னுகிறது. லஷ்மி பிரியா அக்கா கேரக்டரில் அழகாக ஈர்க்கிறார். தீபா ஷங்கர் காமெடியில் சரவெடி கொளுத்தியிருக்கிறார். பலவெடிகள் வெடிக்காவிட்டாலும் சிலவெடிகள் ஆறுதல் அளிக்கிறது. வில்லனாக வரும் மைம்கோபி, ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணனாக வரும் கருணாகரன், இன்ஸ்பெக்டர் கேரக்டரில் வரும் சுனில் ரெட்டி உள்பட படத்தின் பாத்திர வார்ப்புகளும், அவர்களின் நடிப்பும் சிறப்பு
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்தை ஓரளவு காப்பாற்றியே இருக்கிறது. அஜ்மல் தஹஸீன் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை
பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சின்ன பட்ஜெட் படத்தைப் பெரிதாக மேக்கிங்கில் காட்டி அசத்தியுள்ளார்கள்.
படத்தின் பிரதான நோக்கமே காமெடி என்பதால் லாஜிக்கைப் பற்றி இயக்குநர் SG.சார்லஸ் கவலைப்படவில்லை போல. ஆனால் அந்தக் கவலையை நமக்கும் ஏற்படுத்தாமல் திரைக்கதையை புத்திசாலித்தனமாக நகர்த்தி வெற்றிபெற்றுள்ளார். மெயின் கேரக்டர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளில் இருக்கும் நாடகத்தன்மையை குறைத்திருக்கலாம். மற்றபடி லாஜிக் மறக்க வைக்கும் மேஜிக் இருப்பதால் இந்தச் சொப்பன சுந்தரியில் ஒரு ரவுண்ட் வரலாம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்
#SoppanaSundari #சொப்பனசுந்தரி