Tamil Movie Ads News and Videos Portal

சூப்பர் ஸ்டார்களை இயக்குநர்கள் தான் உருவாக்குகிறார்கள்- ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் , ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் ,அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘லாக்கப்’ எனும் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகைகள் லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், நடிகர்கள் கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் தஹ்ஸீன் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை விஷால் சந்திரசேகர் அமைத்திருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையிலுள்ள பிரபலமான வணிக வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநரும், நடிகருமான மோகன் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில்,

கதையின் நாயகியாக ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு என்னுடைய பலமே இயக்குநர்கள் தான். ‘கனா’ படத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் அருண் ராஜா, ‘க /பெ ரணசிங்கம்’ படத்தை வழங்கிய இயக்குநர் விருமாண்டி, ‘சொப்பன சுந்தரி’ படத்தை வழங்கிய இயக்குநர் சார்லஸ் என இவர்கள்தான் காரணம். நடிகர், நடிகைகள் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்கு இயக்குநர்கள் தான் பொறுப்பு. ஒரு இயக்குநர் தான் நடிகர் நடிகைகளை பிரம்மாண்டமாகவும்.. பிரமிப்பாகவும்… காட்சிப்படுத்த முடியும். அந்த வகையில் எனக்கு இயக்குநர்கள் மிகவும் முக்கியம்.

ஒரு நடிகர் நட்சத்திர நடிகராக… சூப்பர் ஸ்டாராக உயர்வதற்கு இயக்குநர்கள் தான் அடித்தளம் அமைக்கிறார்கள். அதிலும் நடிகைகளை, கதையின் நாயகியாக நடிக்க வைத்தால்.. அவர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள். எப்படி கொண்டாட வேண்டும் என்பதை இயக்குநர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

‘சொப்பன சுந்தரி’ படத்தை நான் பார்த்து விட்டேன். நான் இதுவரை சோகம் கலந்த கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படத்தில் முற்றிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஏனெனில் வாழ்க்கையில் மிகவும் கடினமான வேலை என்னவென்றால்… மற்றவர்களை சிரிக்க வைப்பது. கண்ணீர் விட வைப்பது எளிது. ஆனால் சிரிக்க வைப்பது என்பது சாதாரண விசயமல்ல. இது சரியாக செய்து விட்டால்.. அவர்களை விட சிறந்த நடிகை வேறு யாரும் இருக்க முடியாது. அதனை இந்தப் படத்தில் நான் முயற்சித்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில் நான் நடித்திருக்கும் அனைத்து காட்சிகளும், இயக்குநர் சொல்லித் தந்ததை அப்படியே பிரதிபலித்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இது முழு நீள காமெடி வித் ஃபேமிலி என்டர்டெய்னர். இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இயக்குநர் சார்லஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படத்தை இயக்கும் அளவிற்கு உயர வேண்டும் என வாழ்த்துகிறேன். எனக்கு சூப்பர் ஸ்டாரை மிகவும் பிடிக்கும். அவருடைய ஸ்டைலான காட்சிகள் இந்த படத்திலும் இடம் பிடித்திருக்கிறது. ” என்றார்.

‘சொப்பன சுந்தரி’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வில், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அஜ்மல் தஹ்ஸீன், இரண்டு பாடல்களை மேடையில் நேரலையாக பாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்.