ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸின் திரு. ராஜ் சேகர் தயாரிப்பில், கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடித்த ’சூர்ப்பனகை’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளை SP சினிமாஸ் இப்போது கைப்பற்றியுள்ளது.
அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களை வழங்கி திரையுலகில் நற்பெயர் பெற்றுள்ளது SP சினிமாஸ். குறிப்பிடத்தக்க வகையில், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் முறையான உத்திகளைத் திட்டமிடுதல், வர்த்தக வட்டத்தில் இணக்கமான மற்றும் நம்பகமான விதிமுறைகளை உறுதி செய்தல், படத்திற்கான கவனக்குவிப்பை ரசிகர்களிடையே உருவாக்குதல் மற்றும் பெரிய திரை எண்ணிக்கையை எளிதாக்குதல் ஆகியவற்றில் இந்நிறுவனம் சிறப்புத் தகுதியைப் பெற்றுள்ளது. ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ், SP சினிமாஸின் கோல்டன் டச் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறது. ‘சூர்ப்பனகை’ படத்திற்கும் இதன் மூலம் சிறப்பான கவனம் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
ஃபேண்டசி- த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட ‘சூர்ப்பனகை’ திரைப்படம், 1920கள் மற்றும் தற்போதைய காலம் என இரண்டு வெவ்வேறு காலகட்டங்களின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதையாகும். சில தனித்துவமான பழங்கால பொருட்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொல்பொருள் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறார். இது சில மர்மமான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. அக்ஷரா கவுடா, ஜேபி, மன்சூர் அலி கான், ஜீவா ரவி, மைக்கேல், கௌஷிக், யோகி, ரவிராஜா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைக்க, கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது.