Tamil Movie Ads News and Videos Portal

சூரரைப்போற்று- விமர்சனம்

- Advertisement -

சூர்யாவைப் போற்றுவதற்கான எல்லாத் தகுதிகளோடும் வெளியாகி இருக்கிறது சூரரைப்போற்று திரைப்படம். டெக்கான் ஏர்லைன் நிறுவனர் கோபிநாத் அவர்களின் சொந்த வாழ்க்கையை சினிமா மொழியில் இணையத் திரையில் வெளியிட்டு நம் இதயத்திரையில் ஒளிக்கவிட்டுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. மதுரை சோழவந்தான் கிராமத்தைச் சேர்ந்த நெடுமாறன் எளியவர்களுக்கான விமான சேவையைத் துவங்கி வெற்றிபெறும் கதை சூரரைப்போற்று.

*ஒவ்வொரு வெற்றிகரமான மனிதர்களுக்குப் பின்னாலும் ஒரு வலி மிகுந்த கதையிருக்கும். ஒவ்வொரு வலிமிகுந்த கதைக்கும் வெற்றிகரமான முடிவிருக்கும்* என்றொரு வாசகம் உண்டு. அதற்கேற்றாற் போல் தான் டெக்கான் ஏர்லைன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையும். அதை சூர்யாவின் நடிப்பில் காணும்போது மிரட்சியாக இருக்கிறது. 8 ஆண்டுகளாக ஒரு மாஸ்டர் பீஸ் ஹிட்டுக்காக காத்திருக்கும் சூர்யாவிற்கு சூரரைப்போற்று Sure shot hit.

படத்தில் அபர்ணா பாலமுரளி சூர்யா காம்போ மட்டுமே போதும் போதும் என்றளவிற்கு நம் மனதை நிறைத்து அனுப்புகிறது. மனைவியை கொஞ்சும் போதும், இயலாமையில் கெஞ்சும் போதும்..வில்லனிடம் வானம் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா? என்று கேட்கும் போதும், ஒவ்வொரு சறுக்கலில் விழுந்து அழும்போதும் எழும்போதும்..போதும் போதும் என்று சொல்லும் அளவில் தேர்ந்த நடிப்பைக் கொடுத்துள்ளார் சூர்யா. அவரின் நடிப்பை மிகச்சரியாக வெளிக்கொண்டு வர சுதாகொங்கராவின் எழுத்து உதவி இருக்கிறது. பயோபிக் என்ற சிந்தனை வராத வண்ணமும், இது புனைவு அல்ல என்ற எண்ணம் மாறாத வகையிலும் திரைக்கதை அமைத்திருப்பது நல்ல சம்பவம். சூரியாவிற்கு போட்டியாக நடிப்பில் பொம்மியாக படத்தில் வாழ்ந்து நிறைத்துள்ளார் அபர்ணா பாலமுரளி. அவரின் யானைப்பசி நடிப்பிற்கு சோளப்பொரியை விட அதிக தீனிபோட்டுள்ளார் இயக்குநர். வில்லன் பரேஷ் கார்ப்பரேட் கிரிமினல் என்பதை கண்களிலும் செய்கைகளிலும் கொண்டு வருகிறார். குணச்சித்திர நடிப்பில் காளிவெங்கட் அசத்தி இருக்கிறார். நம் தமிழ்சினிமாவில் காமெடி ப்ளஸ் குணச்சித்திரம் இரண்டையும் சரிவிகிதத்தில் தரும் காளி வெங்கட் போன்ற நடிகர்களை நாம் இன்னும் நன்றாக பயன்படுத்த வேண்டும். கருணாஸ், விவேக் பிரசன்னா, பூ ராமு, ஊர்வசி என குறிப்பிட்டுச் சொல்ல படமெங்கும் நிறைய கேரக்டர்கள் உள்ளன.

விஜய் மல்லையா கேரக்டர் கோபிநாத் லைப் ஹிஸ்டரியில் முக்கிய பங்கு வகிப்பதால் அதைச் சேர்த்துள்ளார்கள். அவரிடம் சூர்யா அடிபணியாத படி படத்தில் காட்டப்பட்டுள்ளது. இது இயக்குநரின் கமர்சியல் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது (ஆனால் நிஜத்தில் கோபிநாத் விஜய் மல்லையாவிடம் தன் பங்குகளை விற்றிருக்கிறார் என்பதே வரலாறு)

படத்தின் ஆத்மராகமாக ஜீவி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இடம்பெற்றுள்ளது. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் இரண்டுமே நேர்மை மற்றும் நேர்த்தி.

எல்லோரும் ஏற்றம் பெற தகுதியானவர்கள் தான். அந்தத் தகுதியை நிலைநாட்ட நாம் எவ்வளவு உழைக்கிறோம் என்பது தான் மேட்டர் என்ற பாசிட்டிவிட்டியை அள்ளித்தெளித்துள்ள சூரரைப்போற்று தியேட்டரில் வந்தால் மக்கள் எல்லாரும் பார்த்து போற்றுவார்கள். ப்ளீஸ் கன்சிடர் பண்ணுங்க சூர்யா..

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.