தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் மேயாத மான் படத்தின் மூலம் நாயகியாக உயர்ந்தவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். தொடர்ந்து கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜய்யுடன் ‘மாபியா’ போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து ‘பொம்மை’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் எஸ்.ஜே.சூர்யா ப்ரியா பவானி சங்கரிடம் தனது காதலினைச் சொன்னதாகவும், அதற்கு ப்ரியா மறுத்து தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியது.
இதனையடுத்து எஸ்.ஜே.சூர்யா இந்தத் தகவலை மறுத்தார். ப்ரியா பவானி சங்கர் எனது தோழி மட்டுமே என்று தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து இதுவரை மௌனம் சாதித்து வந்த ப்ரியா முதன்முறையாக இது தொடர்பாக பேசியிருக்கிறார். அவர் கூறும் போது, “இந்த விசயத்தில் எஸ்.ஜே.சூர்யா சற்று அவசரப்பட்டுவிட்டார். அவர் பதற்றத்துடன் மறுப்பு தெரிவித்ததும் அதை மீடியாக்கள் பெரிதுபடுத்திப் பேசத் தொடங்கிவிட்டன. இது போன்ற வதந்திகளை நான் பெரிதும் கண்டுகொள்வது இல்லை. ஆனால் என் நண்பர்கள் கிண்டல் செய்வதை எப்படி சமாளிப்பது என்பதைத் தான் இது போன்ற சூழலில் யோசிப்பேன்” என்று பதிலளித்துள்ளார்.