தமிழ்சினிமா வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு இயக்குநர் மறைந்த கே.பாலச்சந்தர். அவரது பெயரில் ‘கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம்’ என்பதை உருவாக்கி அதற்கான தொடக்கவிழாவை நேற்று நடத்தினார்கள் கவிதாலயா’ பாபு மற்றும் ‘கவிதாலயா’ பழனிசாமி இருவரும். விழாவில் கலந்துகொண்டு கே.பாலச்சந்தரைப் பற்றி சினிமா பிரபலங்கள் பலரும் தங்களின் அனுபவங்களையும் அவரது பெருமைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் சிவகுமார் பேசியதாவது,
“இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல். ‘மூன்று முடிச்சு’ படத்திற்காக விருந்தினர் கதாபாத்திரத்திற்காக என்னை அணுகியபோது நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால், மூன்று முடிச்சு படத்தில் ரஜினி நடிக்கும்போது நீ கறுப்பாக இருக்கிறாய் என்று வருந்தாதே நீ கருப்பு வைரம் தமிழ்நாட்டையே கலக்கப் போகிறாய் என்று அன்றைக்கே கூறியவர். அதேபோல், இயக்குநர் பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டியர் நடிகர் ரஜினிகாந்த்.
‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் என் கதாபாத்திரத்தை அனைவரும் பேசும்படியாக அமைத்தவர் கே.பாலசந்தர். கே.பாலசந்தரின் இயக்கத்தில் முக்கிய இடம்பெற்ற 5 படங்களில் ‘அக்னிசாட்சி’யும் ஒன்று. ‘சிந்து பைரவி’ மூலம் எனக்கு அனைவரின் கைதட்டல்களையும் வாங்கிக் கொடுத்தவர் கே.பாலசந்தர். சினிமா இருக்கும்வரை அவர் புகழ் மறையாது” என்றார்