பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்றத் திரைப்படம் “இன்று நேற்று நாளை”. விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் சயின்ஷ் பிக்ஷன் வகைத் திரைப்படமாகும். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படத்தின் இயக்குநர் ஆர்.ரவிக்குமார் ஆவார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், கருணாகரன் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், நீரவ்ஷா ஒளிப்பதிவில் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
இப்படத்தை 24ஏஎம் நிறுவனம் தயாரித்தது. படப்பிடிப்பு தொடங்கிய ஒரு வாரத்திற்குள் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. சிவகார்த்திகேயனும் பிற படங்களில் நடிக்கச் சென்றுவிட்டார். தற்போது மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. இதுவும் சயின்ஸ் பிக்சன் வகைக் கதைதான் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “மீண்டும் புத்துணர்ச்சியுடன் படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறோம். விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் வெளியிடவிருக்கிறோம்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.