Tamil Movie Ads News and Videos Portal

சீதாராமம்- விமர்சனம்

எப்போதாவது புல்மேல் விழும் பனிபோல நம் இதயத்தைத் தொடும் படங்கள் வருவதுண்டு. இந்த வாரம் சீதாராமம் படம் அப்படியொரு இன்பவருகை. நல்ல தியேட்டரில் முன்பதிவு செய்யுங்கள். கண்டுகளித்து இன்புருங்கள்..ரைட்!

காலம் 1965! காஷ்மீரில் ராணுவப்பணியிலும் ஏராளப்பனியிலும் உழலும் வாலிபன் துல்கர். தாய் தந்தை என யாருமற்ற அவருக்கு கடிதம் வாயிலாக ஒரு காதல் வருகிறது. அந்தக்காதலை தேடி துல்கர் செல்கிறார். அப்போது சில ஆச்சர்யங்கள் நிகழ்கின்றன. அடுத்து காலம் 1985. லண்டனில் படிக்கும் பாகிஸ்தான் பெண்ணான ராஷ்மிகாவிற்கு துல்கர் எழுதிய கடிதத்தை மிருணாள் தாக்கூரிடம் கொடுக்க வேண்டிய கமிட்மெண்ட் வருகிறது! 1965 முதல் 1985 வரையிலான பயணம் என்ன? என்பதை அகண்ட திரையில் மலர்ந்த முகத்தோடு காணலாம்

ஒரு நடிகன் அழும் போதும் அழகாக இருக்க வேண்டும் என்பார்கள். துல்கருக்கு அழகு வசப்பட்டிருப்பது தெரியும். அதைத் தாண்டி இந்தப்படத்தில் நடிப்பு அவருக்கு முழுமையாக வசப்பட்டிருக்கிறது. தன் சீதாவைத் தேடிச் செல்லும் ராமாக நம் நெஞ்சை வருடிச்செல்கிறார் துல்கர். ஒவ்வொரு ப்ரேமிலும் அவரது அர்ப்பணிப்பான நடிப்பு அள்ளிக்கொஞ்ச வைக்கிறது. மிருணாள் தாக்கூர் நிச்சயமாக ஒரு இளவரசியே தான். தான் ஏற்ற பாத்திரத்தை காத்திரமாக்கி கொடுத்திருக்கிறார் ராஷ்மிகா மந்த்னா! இவர்கள் தவிர திரையில் வரும் யாவரும் கவனம் ஈர்க்கிறார்கள்

திரைக்குள் காட்சிக்கு காட்சி அக்காட்சிக்குள் புகுந்து நம் ஆன்மாவை வசீகரித்துள்ளார் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர். பேரதற்புதமான பின்னணி இசை. படத்தின் விஷுவல்ஸை ஸ்கிரீன் ஷாட் எடுத்து இன்ஸ்டாவில் போட்டால் இணையமெங்கும் அழகியல் ததும்பும்!
பாடல் வரிகளும் தமிழ் வசனங்களும் அடிப்பொலி! வெறும் மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் என்ற சுவடே இல்லாமல் உழைத்துள்ளது படக்குழு. தமிழுக்காக கூடுதல் மெனக்கெட்டிருப்பது கூடுதல் சிறப்பு!

பாகிஸ்தானியர் இந்தியருக்குள் இருக்கும் ஓர் மனிதம் நிறைந்த அன்பை அரசியல் கலந்தாலும் அற்புதமாக சொல்லிருக்கிறார் இயக்குநர்! அழகியல், காட்சியமைப்பு, எமோஷ்னல் பேக்கேஜ், என மிகத்துல்லியமாக வார்த்தெடுக்கப்பட்ட கவித்துமான படம். Don’t miss it

4/5
-மு.ஜெகன் கவிராஜ்