கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு போன்ற சிந்திக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் பேசிய வசனங்களை போல், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது’ என இந்த திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டாக்டர் பிரபு திலக் தெரிவித்திருக்கிறார்.
லார்க் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. பிப்ரவரி 24 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், ஷா ரா, திவ்யா கணேஷ் இவர்களுடன் பின்னணி பாடகர் மனோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவினில் படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா பேசுகையில்,
கொரோனா தொற்று காலகட்டத்திற்கு பிறகு தொடங்கப்பட்ட திரைப்படம் இது. தயாரிப்பாளர் குமார், தயாரிப்பாளர் போல் அல்லாமல் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, பட குழுவினருடன் இணைந்து பணியாற்றுவார். அவருடைய எளிமைக்கும், நேர்மைக்கும், பெருந்தன்மைக்கும் இன்னும் கூடுதல் உயரங்களை தொடுவார். அடுத்ததாக இந்த படத்தின் தொடக்க விழாவின் போது வருகை தந்து படக்குழுவினரை விநியோகஸ்தர் பிரபு திலக் வாழ்த்தினார். அதற்குப் பிறகு அவருடன் உரையாடுவதற்கு தற்போது தான் நேரம் கிடைத்தது. அவருடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு 11:11 என இடம்பெற வைத்திருப்பதற்கும், அதன் மேல் உள்ள இலச்சினைக்கும் அர்த்தம் இருக்கிறது என்பதை அறிந்து வியந்தேன். அவர் ஆன்மீகம் கலந்த அற்புதமான மனிதர்.
இயக்குநர் விக்னேஷ் ஷா போனில் தொடர்பு கொண்டு கதையை விவரித்தார். உணவை விநியோகிக்கும் ஊழியருக்கு செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்ட் போன் ஒன்று கிடைக்கிறது. அதன் பிறகு அவருடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது? அவனுக்கு அவன் விரும்பியது அனைத்தும் கிடைக்கிறது. அவனுக்கும், போனுக்கும் ஒரு உணர்வுபூர்வமான தொடர்பு ஏற்படுகிறது. அதன் பிறகு அதற்கான தீர்வு என்ன?.. என திரைக்கதை இருக்கிறது. இது புதிதாக இருந்தது.
இந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள்? என கேட்டேன். ‘மேகா ஆகாஷ் நடிக்கிறார்’ என சொன்னார். படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு, ‘நீங்கள் ஷங்கர் அவர் சிம்ரன்’ என்றார், நானும் சரி என்று, ‘சிம்ரன் எங்கே?’ என்று கேட்டேன். ஒரு போனை கொண்டு வந்து கொடுத்தனர். நான் மேகா ஆகாஷ் நாளைக்கு வருவார் என நினைத்தேன். ஆனால் படப்பிடிப்பு முடியும் வரையிலும் மட்டுமல்ல.. இதுவரையிலும் அவரை நான் நேரில் பார்த்ததில்லை. சரி இன்றாவது அவர்கள் வருவார்களா..! என எண்ணி வந்தேன். இங்கும் அவர்கள் வரவில்லை.
இந்தத் திரைப்படத்தில் லியோன் ஜேம்ஸ் இசையில், ‘சோறு முக்கியம்..’ என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடலை படமாக்கும் போது பார்வையாளர்களாக ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். ஏனெனில் நான் முதன்முதலாக இந்த பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன். இதற்காக நடன இயக்குநர் சாண்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சிலர் அருகில் இருக்கும் போது சந்தோஷமாக இருக்கும். அந்த மாதிரியான நேர்நிலையான அதிர்வை ஏற்படுத்தும் சாதனையாளர் தான் பாடகர் மனோ. இதுவரை இருபத்தாறாயிரம் பாடல்களை பாடி இருக்கிறார். இவர் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த மாபெரும் சொத்து. இவருடன் நடிக்கும் போது, கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அருகில் அமர வைத்து, அவர் பாடிய பாடல்களை பாடுமாறு கேட்பேன். அவரும் சலிக்காமல் பாடி, அனைவரையும் உற்சாகப்படுத்துவார். இதன் தொடர்ச்சியாக அவர் அவருடைய வீட்டிலிருந்து மதிய உணவை வரவழைத்து பட குழுவினருக்கு வழங்கி அவருடைய விருந்தோம்பலை வெளிப்படுத்துவார். இதற்காகவே அவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் நானும் அவருடன் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் அனைவரும் தவறவிட்ட குழந்தைத்தனத்தை அவர் இந்த திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இது ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ” என்றார்.