’பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இவர் நாயகனாக அறியப்பட்டாலும் அதற்கு முன்னர் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் நடிக்க வந்தாலும், அவருக்கு அந்த இயக்குநர் வேலை மீதான ஆர்வம் இன்னும் குறையவில்லை.
அதை மெய்ப்பிக்கும் விதமாக தற்போது தெலுங்கில் உருவாகும் ஒரு படத்திற்கு கதை, வசனம் மற்றும் திரைக்கதை எழுதவிருக்கிறார். இது குறித்துப் பேசிய சித்தார்த், “எதிர்காலத்தில் கண்டிப்பாக ஒரு படம் இயக்கும் ஆர்வம் இருக்கிறது. ஆனால் அதற்கு நான் இன்னும் தயாராகவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் விரைவில் கண்டிப்பாக ஒரு படத்தை இயக்குவேன்.” என்று கூறியுள்ளார். இவரைப் போல் பூ படத்தின் மூலம் நாயகியாக உயர்ந்த பார்வதியும் இந்தாண்டு இறுதிக்குள் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.