நடிகர்களில் கமல்ஹாசன் எப்படியோ; நடிகைகளில் ஸ்ருதிஹாசனும் அப்படியே. நடிப்பில் இந்த ஒப்புமை ஒத்து வராது என்றாலும் கூட குணத்திலும் அப்படியே ஒத்து வருகிறது. இருவருமே வெளிப்படைத்தன்மைக்கு பேர் போனவர்கள் என்றே சொல்ல வேண்டும். தனது குடிப்பழக்கம், தனது காதல் தோல்வி இப்படி எதையுமே ஸ்ருதிஹாசன் எப்பொழுதுமே மறைத்ததில்லை. தற்போது குடிப்பழக்கத்தை நிறுத்தியப் பின்னர் தன் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருப்பதாக கூறி இருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது, “நான் என் வாழ்க்கையில் எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு குடித்து விட்டேன்.
அதுவும் சனிக்கிழமை இரவுகளில் மிக அதிகமாக குடித்திருக்கிறேன். குடியை நிறுத்தியப் பின்னர் என் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது. குடிப்பழக்கத்தை சரி, தவறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன்.
இங்கு ஆண்கள் பெண்கள் எல்லோருமே குடிக்கிறார்கள். ஆனால் இரண்டையுமே ஒரே அளவுகோலில் யாரும் பார்ப்பதில்லை. கிராமப்புறங்களில் சில பெண்கள் தங்கள் கணவன்மார்களின் அடி தாங்க முடியாமல் தினமும் குடிக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் யாருமே பேசவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.