Tamil Movie Ads News and Videos Portal

அருணாச்சலம் வைத்யநாதன் தயாரித்து இயக்கும் குழந்தைகளுக்கான திரைப்படமான ‘ஷாட் பூட் த்ரீ’ !

பிரசன்னா-சினேகா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அர்ஜுன் நடிப்பில் நிபுணன், மோகன்லால் நடித்த பெருச்சாழி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவரும், சீதக்காதி இணை தயாரிப்பாளருமான அருணாச்சலம் வைத்யநாதன், அவரது அடுத்த படத்தை தற்போது மும்முரமாக தயாரித்து இயக்கி வருகிறார்.

ஷாட் பூட் த்ரீ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்தும், குழந்தைகளின் மனதில் வைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது. சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் பூவையார் (மாஸ்டர்), பிரபல பாடகி பிரணிதி, நடனக் கலைஞர் கைலாஷ் ஹீத் மற்றும் புதுமுகம் வேதாந்த் ஆகியோர் மைய வேடங்களில் நடிக்கின்றனர்.

நான்கு குழந்தைகளை சுற்றிய கதையான ஷாட் பூட் த்ரீ-யின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறை கொண்டாட்டமாக இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

படத்தைப் பற்றி அருணாச்சலம் வைத்யநாதன் கூறுகையில், “குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் தமிழ் படங்கள் மிகவும் குறைவு. அப்படி எடுக்கப்படும் படங்களிலும் காதல், சண்டை காட்சிகள் போன்றவை இடம் பெறும். அவ்வாறாக இல்லாமல், குழந்தைகளின் உலகத்தை, குழந்தைகளுக்காக, குழந்தைகளை வைத்தே காட்ட வேண்டும் என்கிற முயற்சி தான் இந்த படம். குழந்தைகளுக்கான திரைப்படமாக இருந்தாலும் இது அனைத்து வயதினரையும் கவரும்,” என்றார்.

பொதுவாக குழந்தைகளை வைத்து படத்தை இயக்குவது கடினம் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், அதை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக நாங்கள் மாற்றியுள்ளோம். ஒவ்வொரு காட்சியும் படமாக்கப்படுவதற்கு முன்னர் 20 முறை ஒத்திகை பார்க்கப்படுகிறது என்று இயக்குநரும் தயாரிப்பாளருமான அருணாச்சலம் வைத்யநாதன் கூறினார்.

சினேகா மற்றும் வெங்கட் பிரபு உள்ளிட்டோருடன் பணிபுரிவது கூறிய அவர், “நீண்ட இடைவெளிக்கு பிறகு சினேகாவுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. வெங்கட் பிரபுவை இயக்குவது ஜாலியான அனுபவம். யோகி பாபு தனது தனித்துவ பாணியில் படத்திற்கு மெருகு சேர்க்கிறார். குழந்தை நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக நடித்து வருகின்றனர்,” என்றார்.அன்புக்கொரு பஞ்சமில்லை என்பதே படத்தின் சாராம்சம் என்று அருண் வைத்தியநாதன் மேலும் கூறினார்.

“கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் தான் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளாரகள். OTT தளங்களிலும் கூட குழந்தைகளை கவரும் வகையில் படங்கள் வரவில்லை. இந்தப் படத்தின் கதையை ஆனந்த் ராகவ்வுடன் இணைந்து கொரோனாவுக்கு முன்னரே நான் எழுதி விட்டாலும், அதை எடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட உள்ளோம். இதன் கதை சென்னையில் நடைபெற்றாலும், உலகத்தில் உள்ள எந்த குழந்தையும் இதை தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். தயாரிப்பு ரீதியாகவும் படத்தின் குழுவிலும் நிறைய புதுமைகளை புகுத்தி உள்ளோம்,” என்று அருணாச்சலம் வைத்யநாதன் கூறினார்.

படத்தின் ஒளிப்பதிவை சுதர்ஷன் ஸ்ரீநிவாசன் கையாள, வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா இசையமைக்கிறார். படத்தொகுப்புக்கு சதீஷ் சூரியாவும், கலைக்கு ஆறுசாமியும் பொறுப்பேற்றுள்ளனர்.இந்த படத்தை தனது சொந்த நிறுவனமான யூனிவெர்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் அருணாச்சலம் வைத்தியநாதன் தயாரித்து இயக்குகிறார்.