காவியத்தில் இருந்து ஒரு காதல் கதையை எடுத்து அதை சினிமா மொழியில் கவிதையாக்கினால் அதுதான் சாகுந்தலம்
வானலோகத் தாயால் பிறபிக்கப்பட்ட சகுந்தலா காட்டில் முனிவர்களின் கண்காணிப்பில் வளர்கிறாள். மகாராஜாவான துஷ்யந்தன் காட்டுக்குள் வரும்போது சகுந்தலாவைப் பார்க்கிறான். இருவருக்குள்ளும் காதல் நெருப்பு பரவ, சகுந்தலா வயிற்றில் ஒரு குழந்தை உருவாகிறது. நாடு அழைக்கும் கடமையால் இதோ வருகிறேன் என துஷ்யந்தன் செல்கிறான். சகுந்தலா காத்திருக்கிறாள். துஷ்யந்தன் வரவில்லை. ஒரு கட்டத்தில் சகுந்தலா துஷ்யந்தனைத் தேடிச் செல்கிறாள். துஷ்யந்தனுக்கு சகுந்தலாவை காதலித்த கணங்கள் அனைத்தும் மறந்து போகிறது. சகுந்தலா உடைகிறாள். துஷ்யந்தன் மறந்ததிற்கான காரணம் என்ன? நிற்கதியாய் நின்ற சகுந்தலா என்ன செய்தாள்? என்பதற்கான விடையே சகுந்தலம் கதை
சகுந்தலாவாக சமந்தா. மிகையில்லா நடிப்பாலும் சிகை பொருந்திய அழகாலும் நம்மை கவர்கிறார். துஷ்யந்தனாக வரும் தேவ்மோகனும் நம்மை வசீகரிக்கிறார். படத்தில் இவர்கள் இருவர்களே பிரதான பாத்திரங்கள் என்பதால் வேறு எவரும் பெரிதாக அடையாளத்திற்குள் வரவில்லை. ஒரு சிறுவனின் நடிப்பும் வருகையும் மட்டும் அட்டகாசம்
மணிசர்மாவின் இசை நம்மை புராண காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. இசையெங்கும் காதல் ராகம். ஒளிப்பதிவும் கச்சிதம். சி.ஜி ஏரியா மட்டும் படு வீக்-ஆக அமைந்துள்ளது
மிக உருக்கமான கதை இது. பக்தி இலக்கியப் பிரிவில் எழுதப்பட்டு பெரிதும் கொண்டாடப்பட்ட இக்கதையை இஷ்டத்திற்கு துண்டாடாமல் நேர்மையாக அணுகியமைக்கு இயக்குநர் குணசேகரனைப் பாராட்டலாம். இரண்டாம் பாதியில் இருந்த அழுத்தமும் உருக்கமும் முதல் பாதியில் மிஸ்ஸிங். சில நாடகத்தனமான வசனங்களையும் காட்சிகளையும் சற்று மாற்றி அமைத்திருக்கலாம். இப்படியான சிறுசிறு குறைகளை மறந்து தியேட்டரில் அமர்ந்தால் நம்மை அட்டகாசமாக உள்ளிழுத்துக் கொள்ளும் இந்தக் காதல் சகுந்தலம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்
#Shaakuntalam #சாகுந்தலம் #samantha