இசை மீது காதல் வயப்படாத மனித உயிரென்று எதுவுமே இருக்க முடியாது. ஏதேனும் சில பாடல்கள் நம் உயிரில் கலந்த ஒன்றாக இருக்கும்.. அந்தப் பாடல்களுக்குப் பின்னால் இழந்து விட்ட வாழ்வு இல்லை அடைந்து நிறைந்த வாழ்வு என ஏதேனும் ஒன்றிருக்கும். இந்த நூலை எழுதிய ஷாஜிக்கு இசை மேல் வெறும் காதல் மட்டுமல்ல…இசையை நேசிப்பதை மட்டுமே வாழ்வாக கொண்டவர் போல.. நாடி நரம்பெல்லாம் இசை வெறி ஊறியவரால் தான் இப்படியொரு அழகான இசை சார்ந்த எழுத்தை கைவரப்பெற முடியும். முன்பு ஆனந்த விகடன் பதிப்பகம் வெளியீட்ட இந்நூலை இப்போது டிஸ்கவரி புக்பேலஸ் மிகத்தரமாக வெளியீட்டுள்ளது. 598 பக்கங்களையும் கண்கள் வழியாக செவிகளுக்கு அனுப்பி அங்கிருந்து மனதிற்குள் கொண்டு வர முடியும். 15 நாட்களாக வாசித்துத் தீர்த்த இந்நூலை இன்னும் நிறைய நாட்கள் அசை போட்டுக்கொண்டே இருப்பேன்.
ஷாஜி தான் இசைப்பிரியன் ஆன சுருக்க வரலாறைச் சொல்லும் போதே அவரின் இசை ஆர்வத்தை உள்வாங்க முடிகிறது. அதன்பின் தான் நேசித்த பாடகர்கள், இசை அமைப்பாளர்களை வரிசைப்படுத்தி அவர்களின் இசை ஆளுமை, குரல் ஆளுமை ஆகியவற்றை அவரவர்களின் பாடல்களை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார். கூடவே சில பக்கங்களில் அவர்களின் இசை சார்ந்த வாழ்க்கை வரலாற்றையும்.
மலேசியா வாசுதேவன் பற்றி நிறையபேர்கள் அறியாத செய்திகளை எல்லாம் ஷாஜி தன் எழுத்தில் வடித்துள்ளார். மலேசியாவில் ரப்பர் தோட்டங்களில் வேலையாட்கள் முன்பு பாடி மகிழ்ந்த அந்தப்பத்து வயது சிறுவன் படாதபாடு பட்டு முதல் பாட்டை அடைந்த கதை ஆச்சர்யமாக இருந்தது. மேலும் மலேசியா வாசுதேவன் செயற்கை உணர்ச்சிகளை பாடல்களில் வெளிப்படுத்தாமல் அந்தப் பாடல் பாடப்படும் கதை மாந்தரின் உளநிலையை மட்டுமே குரலில் வெளிப்படுத்துகிறார் என்பது ஷாஜியின் முடிவு. மலேசியா வாசுதேவன் பற்றிய பதிவில் மறைமுகமாக எஸ்.பி.பி அவர்கள் பாடல்கள் நடுவே செய்யும் சிரிப்பு அழுகை ஆகியவற்றை மறைமுகமாக விமர்சித்துள்ளார் ஷாஜி. நமக்கு அதில் உடன்பாடில்லை. “பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள” என்ற கமலின் பாட்டில் எஸ்.பி.பி சிரிப்பதை மட்டுமே ரிவைண்ட் பண்ணி கேட்ட 80S கிட் அடியேன். இசையை அறிவுப்பூர்வமாக அணுகுவதற்கும் உணர்வுப்பூர்வமாக அனுபவிப்பதற்குமான முரண்பாடு இது. எனக்கு மலேசியா வாசுதேவனின் பாடல்கள் மீது அலாதிப்பிரியம் உண்டு. ஆனால் எஸ்.பி.பியின் குரலில் தான் அடியேன் தாய்மடியை காண்பது. மேலும் இளையராஜா பற்றி நூலில் பிறர் கட்டுரைகளில் தான் சின்னச் சின்ன பதிவுகள் எழுதியிருக்கிறார் ஷாஜி. இளையராஜாவுக்கு என்று தனிப்பதிவு ஏதுமில்லை. இளையராஜாவைப் பற்றி ஏன் எழுதவில்லை என்று கேட்கமுடியாது. அதேசமயம் இளையராஜா இல்லாத இசை ஆளுமைகளின் வரிசையை பெரிதாக ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை..
பாப்மர்லி, மைக்கேல் ஜாக்சன், ஈடித் பியாஃப், கீதாதத், ஏ.ஆர் ரகுமான், ஹரிகரன், ஸ்ரேயா கோஷால் என கிட்டத்தட்ட 40 ஆளுமைகளை பற்றி மிக விரிவாக ஆகச்சிறப்பாக எழுதியுள்ளார் ஷாஜி. எம்.எஸ் விஸ்வநாதன் பற்றிய கட்டுரைகள் இரண்டும் ஆகத்தரம். அவர் சொல்லிக்கொடுப்பதில் பத்து சதவிகித்தை கூட பாடகர்களால் பாட முடியாது என்ற செய்தி வியப்பைத் தந்தது. நவீன இசையொலிகளை காதுகளுக்கு அறிமுகம் செய்து அதன் மூலம் ரசனை மேம்பாட்டுக்கு உதவிய ஏ.ஆர் ரகுமான் பற்றிய ரசனை மதிப்பீடு ஆகத்தரம். ஈடித் பியாஃப் என்ற பிரான்ஸ் நாட்டுப்பாடகியின் திறமையும் வாழ்வும் தீட்டப்பட்ட பதிவு ஒன்று கலங்கடித்தது. விபச்சார விடுதியில் வளரும் ஈடித்தை அவளது அப்பா தெருவில் வித்தை காட்டும் போது பிச்சையெடுக்க ஆள் வேண்டும் என தூக்கிச் செல்கிறார். ஒருநாள் சில இளைஞர்கள் ஈடித்தை பாடச்சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள். அந்நாட்டின் தேசியகீதத்தை சட்டென ஈடித் பாட அந்தக் குரலில் வெளிப்பட்ட உணர்ச்சி அனைவருக்கும் பிடித்துப்போக ஈடித் தெருப்பாடகி ஆகிறாள். பின் அவள் குரல் மூலம் அடையும் உயரங்களும், உடல்வழியே அடைந்த துயரங்களும் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகச்சிறப்பான கட்டுரை இது
பி.பி ஸ்ரீனிவாஸ் பற்றிய பதிவு அட்டகாசம். பர்சனலாக எனக்கு பி.பி ஸ்ரீனிவாஸ் அய்யாவோடு சின்ன கான்வர்சேஷன் நடந்தது நினைவுக்கு வந்தது. . அதுவொரு கவியரங்கம். கவிதையின் தலைப்பு கண்ணதாசன். நான் அப்போது ஆர்வக்கோளாறு கொண்ட அரைகுறைகள் கூட இல்லாத பெருங்குறைகள் கொண்ட கவிஞன் (இப்பவும் தான்) அந்த நிகச்சியின் சிறப்பு விருந்தினர் பி.பி ஸ்ரீனிவாஸ் அய்யா.
“கண்ணதாசன் வரிகள் ஒருவரை முழுதுறவுக்கும் அழைக்கும் முதல் இரவுக்கும் அழைக்கும்”
என்று கவிதையை ஆரம்பித்தேன்.. பி.பி ஸ்ரீனிவாஸ் அய்யாவைப் பற்றி பேசவேண்டும் என,
“இவர் தள்ளாத வயதிலும் பொல்லாத இளைஞர்” என்றேன்.
சட்டென மைக்கை வாங்கி, “பொல்லாத இளைஞர்னு சொன்ன ரொம்ப நன்றி. ஆனால் தள்ளாத வயதுன்னு சொன்னதை ஏத்துக்க மாட்டேன்” என்றார். அரங்கமே சிரித்து மகிழ்ந்தது.
மேலும் எங்கள் ஊர் பாடலாசிரியர் அமரர் மாயவநாதன் எழுதிய “கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு” பாடலை ஜெமினியின் குரலாக பி.பி ஸ்ரீனிவாஸ் பாடியிருக்கும் விதத்தை ஷாஜி அழகாக எழுதியிருக்கிறார். குரல் வெளிப்பாட்டுத் தன்மையில் இயல்பை மீறாத அழகை கொண்டவர் பி.பி ஸ்ரீனிவாஸ் என்பது ஷாஜியின் முடிவு. உடனே பி.பி ஸ்ரீனிவாஸ் பாடல்களை திரும்பவும் கேட்டேன். ஷாஜி சொல்வது மிகச்சரி. “காலங்களில் அவள் வசந்தம்” என்ற பி பி.ஸ்ரீனிவாஸ் அய்யா பாடலுக்கு அடியேன் காலமெல்லாம் அடிமை🙏🙏
ஹிந்தி இசை உலகின் இசைஞர்கள் சிங்கர்கள் பற்றிய பதிவுகளும் பெரும் சிறப்பு. குறிப்பாக கீதாதத் பற்றிய குறிப்புகள் அழுத்தமானவை. அதேபோல் நம் இதயங்களை தன் பேரழகு குரலால் நிரந்தரமாக வசீகரித்து வைத்துள்ள ஸ்வர்ணலதாவின் பதிவும் அருமை. நிறைய கலைஞர்களின் வாழ்வும் திறமையும் நேர் எதிராக நின்று அவர்களை குலைத்துப் போட்டுள்ளது. நூலை வாசித்ததும் ஆகா..இசையில் இவ்வளவு இருக்கிறதா..என்ற வியப்பும், இசையோடு தொடர்புடைய வாழ்வைக் கொண்டுள்ள நமக்கு இவ்வளவு ஆளுமைகளை தெரியாமல் உள்ளதே என்ற தாழ்வுணர்ச்சியும் வந்தது.
இசையோடே வாழ்ந்த அனுபவத்தை அள்ளித்தந்த நூல் இது. ஒரு பாடகர், இசைஞர் பற்றிப் படித்தவுடன் அவர்களின் பாடல்களை தேடி கேட்க வைப்பதில் தான் இந்த நூல் பெரிதாக ஜெயித்துள்ளது. இசைக்காதலர்கள் தவறவிடக்கூடாத புத்தகம்❤️
#Shaajiisaikatturaigal #ஷாஜி இசைக்கட்டுரைகள்