Tamil Movie Ads News and Videos Portal

சேத்துமான்- விமர்சனம்

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்ற சிறுகதையே சேத்துமான் என்ற படமாகியிருக்கிறது. இலக்கியத்தில் இருந்து சினிமா என்பது ஓர் அற்புதமான முன்னகர்வு. அதை கன கச்சிதமாகச் செய்திருக்கிறார் இயக்குநர் தமிழ். இப்படியான தனித்துவமிக்க கதைகளை படமாக தயாரிப்பதால் தான் நீலம் புரொடக்‌ஷனும் பா.ரஞ்சித்தும் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள்.

தமிழ்நாட்டின் கொங்குப்பகுதியில் ஆதிக்கச்சாதியினரால் கொலை செய்யப்படுகிறார்கள் சிறுவன் அஸ்வினின் அப்பா அம்மா. அஸ்வினை அவரது தாத்தா மாணிக்கம் உயிராக எண்ணி வளர்த்து வருகிறார்.

அந்த ஊரின் உயர்சாதி என்று கருதப்படும் ப்ரசன்னா ஒருநாள் சேத்துமான் கறி (பன்றிக்கறி) சமைத்துச் சாப்பிட ஆள் சேர்க்கிறார். அந்தக் கறியை பக்குவமாக சமைத்துக் கொடுக்கும் பொறுப்பை மாணிக்கம் ஏற்கிறார். கறி சமைக்கும் இடத்திற்கு சிறுவன் அஸ்வினும் உடன் செல்கிறான். கறி வேகும் இடைவெளியில் நடக்கும் சம்பவங்களும் எதிர்பாராத முடிவும் தான் சேத்துமான் படத்தின் கதை

இந்தப்படத்தில் பேசப்படும் வர்ண வேறுபாடுகள் வலிந்து திணிக்கப்படாமல் வெகு இயல்பாக இருப்பது நிஜத்தோடு நம்மை நெருங்க வைக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் அரசியல் இருக்கிறது. சிற்சில காட்சிகள் அரசியலாகவே இருக்கிறது. ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் செய்தி ஒரு டீக்கடை பேப்பரில் தொங்குகிறது. அதற்கு முன்னால் ஒரு ஒடுக்கப்பட்ட கேரக்டர் கண்ணாடி க்ளாஸில் டீ கேட்டுப்போராடுகிறது. இப்படி நிறைய நுட்பதிட்ப காட்சிகள் படத்தில் க்ளாஸ் ஆக இருக்கிறது

படத்தின் மற்றொரு பலம் நடிகர்கள். அஸ்வினின் தாத்தாவாக வரும் மாணிக்கம், பேரனான அஸ்வின் இருவருக்குமான பாண்டிங் கச்சிதம். நடிப்பும் அப்படியே. பண்ணாடியாக வரும் ப்ரசன்னா சேத்துமான் கறிக்காக ஒவ்வொரு நபரிடமும் கூறு கேட்கும் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். அவரின் எதிர் பங்காளியாக வரும் சுருளி கேரக்டரும் அத்தனை எதார்த்தம். வாத்தியார், பிரசன்னாவின் மனைவி கேரக்டர் எல்லாம் மிகச்சிறந்த தேர்வு

பெருமாள் முருகனின் தேர்ந்த வசனமும் கதையும் படத்திற்கு பெருந்தூண். மிக எதார்த்தமான ஒளிப்பதிவும் பின்னணி இசையும் சேத்துமானின் கூடுதல் பலம்.

பின்பாதியில் தெறிக்கும் காமெடி வசனங்களும் செரித்துக் கொள்ளவே முடியாத க்ளைமாக்ஸும் படத்தை வேறோர் தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. தமிழ்சினிமாவில் வலிமையான கதையும், அதை எதார்த்தம் மீறாமல் சொல்லும் கலை நேர்த்தியும் ஒரு படத்திற்கு வாய்த்தால் எல்லோராலும் அந்தப்படம் கொண்டாடப்படும். அதற்கு சேத்துமான் படமும் ஓர் நற்சான்று

-மு.ஜெகன் கவிராஜ்