பாலியல் வன்முறைக்கு எதிராக அறக்குரல் எழுப்புகிறாள் இந்த செம்பி
கொடைக்கானலில் தன் பேத்தியான சிறுமி செம்பியை தன் உயிரென எண்ணி வளர்த்து வருகிறார் கோவை சரளா. அவரின் இதயபிடிக்குள் இன்பமாக வளர்கிறாள் பத்து வயதுச் சிறுமியான செம்பி. உடல் வெறி பிடித்த அதிகார வர்க்க மூவர் சிறுமியை சிதைக்கிறார்கள். வெகுண்டெழும் கோவை சரளா அவர்களுக்கு எதிராக அஸ்வின் உள்ளிட்ட பலரின் உதவியோடு நியாயத்தை எப்படி அடைகிறார் என்பதே செம்பியின் கதை
கோவை சரளா தன் வாழ்வில் கொண்டாடும் ஒரு படமாக இது இருக்கும். அப்படியொரு கேரக்டர் அவருக்கு. அடடா மிகச்சிறப்பான நடிப்பால் அசத்தியுள்ளார். செம்பியை தோளில் சுமந்து கொண்டு அவர் மலையிறங்கும் காட்சியில் நம் மனம் இளகுகிறது. செம்பியாக நடித்துள்ள சிறுமி நிலா தன் ஆகச்சிறந்த நடிப்பால் படத்தை வெளிச்சமாக்குகிறார். நடிகர் அஸ்வினுக்கு இந்தப்படம் நடிகராக ஒரு நல்ல நுழைவுச் சீட்டு. நாஞ்சில் சம்பத், பழ கருப்பையா, மூன்று அதிகார மட்ட இளைஞர்கள் உள்பட அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்
நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசைதான் செம்பியின் ஜீவன் என்றால், எம்.ஜீவனின் கேமரா செம்பியின் ஆன்மா. இந்த இருவரும் கதையின் காத்திர உணர்வை திரையில் அப்படியே சாத்தியமாக்கியுள்ளார்கள்
பிரபு சாலமனுக்கு காடும் மலையும் கொள்ளைப் பிரியம் என்பதால் ரசித்து ரசித்து மேக்கிங் பண்ணியிருக்கிறார். செம்பிக்கு நடக்கும் கொடூரத்திற்கு எதிராக பலரும் ஒன்றிணைவது நல்ல திருப்பம் என்றாலும் அதில் லாஜிக் வலிமையாக இல்லை. கோர்ட் ட்ராமா காட்சிகளும் பெரிய அதிர்வை ஏற்படத்தவில்லை. முற்றாக கனெக்ட் ஆகாவிட்டாலும் தவறாமல் பார்க்க வேண்டிய படம் என்ற விசயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது செம்பி.
3/5
-மு.ஜெகன் கவிராஜ்