“பக்கத்து வீட்டுல தேங்காயை உடைச்சா நம்ம வீட்ல செரட்டையையாவது உடைக்கணும்”னு சொல்வாக. பெரிய ஹீரோக்கள் கழுகு சைஸ்ல மாஸ் காட்டுனா நாம ‘ஈ’ சைஸ்லயாவது மாஸ் காட்டணும்னு முடிவெடுத்து களம் இறக்கி இருக்கிறார்கள் ஜீவாவும் ரத்னசிவாவும்.
துருதுரு ஜீவா லோக்கல் சேனல் நடத்தும் லோக்கல் விஜே. அவருக்கு தமிழ்சினிமா வழக்கப்படி அநியாயத்தைக் கண்டால் கோபம் வரும். அப்படியான கோபத்தில் லோக்கல் எம்.எல்.ஏ வை பகைத்துக் கொள்கிறார்.
எம்.எல்.ஏ ஜீவாவைக் கொல்ல ஆள் கொண்டு வருகிறார். வந்த ஆள் ஜீவாவை போட்டுத்தள்ளுவதற்குப் பதிலாக ஜீவாவின் உயிரான தங்கச்சியின் உயிரைக் காப்பாற்றிச் செல்கிறார். தங்கை அவரைப் பார்த்தே ஆகணும் என்று சொல்ல ஜீவா சென்னை செல்ல…அடுத்தடுத்த அதிரடி தான் சீறு
மிளகா போன்ற மீசையை வைத்தே அவ்வளவு அழகா முறுக்கி விட்டு கெத்து காட்டி இருக்கிறார் ஜீவா. மாஸ்டர் பட ஷுட்டிங் ஸ்பாட்ல திடீர்னு இன்கம்டாக்ஸ் காரய்ங்க நுழைஞ்ச மாதிரி திடீர்னு ஹீரோயின் வந்துட்டு திடீர்னு காணாமப் போய்டுறாப்ல.
சதிஷ் அடிக்கும் பன்ச்கள் பல பஞ்சராகி விட்டாலும் ஓரளவு ஒப்பேத்தி இருக்கிறார். தங்கை கேரக்டரில் வரும் காயத்ரி மற்றும் சென்னை ரவடி கேரக்டரில் வரும் வருணும் நல்ல தேர்வு. வில்லன் நவ்தீப் ஸ்டைலிஷாக மிரட்டுகிறார். 20 நிமிட போர்ஷனில் பவித்ரா கேரக்டர் தரம்.. ஆகத்தரம்
நல்ல லைன் பிடித்து சீறிப்பாயும் சீறு சிறு லாஜிக் மேட்டர்ல தான் சுத்தமா கோட்டைவிட்டுட்டு கோட்டைத் தொட சிரமப்படுது. ரவுடிக்குள் நல்லவன் என்பது கூட ஓ.கே தான். ஆனால் அந்த ரவுடியிடம் என்னைக் கொல்லு கொல்லு என்று ஹீரோ வம்படியாப் போறதுல்லாம் கொஞ்சம் பச்சப்புள்ளத்தனம் தானே! 12+ல அதிக மார்க் எடுத்துப் பொண்ணு டிவி முன்னாடி பேசுறதை இவ்ளோ நேரம்லாம் டெலிகாட்ஸ் பண்ணுவாங்களா? மேலும் இப்பவெல்லாம் அப்படி பேட்டி யாரும் எடுக்குறதுல்ல.
டி.இமானின் பின்னணி இசையில் செம்ம அதிர்வு. ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் தரமான வார்ப்பு! இலக்கு சரியா வைக்கப் பட்டிருக்கு. புறப்பட்ட அம்பு தான் சற்று இடறிடிச்சு. ஆனாலும் இரண்டு மணி நேரமும் செம்ம விறுவிறுப்பு. அதனாலே குறைகள் மருந்து சீறுவை நோக்கி சீறலாம்
-மு.ஜெகன்சேட்