Tamil Movie Ads News and Videos Portal

சீனுராமசாமியின் பிறந்தநாளில் மரக்கன்று நட்டு வைக்கும் பணியை துவங்கிய ராயல் பிரபாகர்

பி.ஆர்.கே சினி பர்த்டே காலண்டர் ராயல் பிரபாகர் தமிழ்சினிமா பிரபலங்கள் மத்தியில் பிரபலமானவர். சினிமாத்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் மற்றும் சினிமா பத்திரிகையாளர்களின் பிறந்தநாட்களை சரியாக நினைவில் வைத்து, அவர்களின் பிறந்தநாள் வரும்போது அதை அனைவருக்கும் அனுப்பி பிறந்தநாள் நாயகர்களை உள்ளம் மகிழச் செய்வார். இந்தப்பணியை அவர் வாட்ஸ் அப் தோன்றாத காலத்தில் இருந்தே செய்து வருகிறார். 14 ஆண்டுகளாக இதைத் தொடர்ந்து செய்து வரும் ராயல் பிரபாகர் சுமார் எட்டு ஆண்டுகளாக ஒவ்வொருவரின் பிறந்தநாள் அன்றும் கோவிலுக்குச் சென்று பிறந்தநாள் காணுபவரின் பேரில் அர்ச்சனை செய்வார்.

சிலர் இவரின் அன்பிற்காக அர்ச்சனையின் போது நேரில் வருவதும் உண்டு. சமீபத்தில் நடிகர் யோகிபாபு கூட அப்படி வந்திருந்தார் ராயல் பிரபாகரை மனதாரப் பாராட்டியிருந்தார். வரும் 2021-ஆம் ஆண்டு வந்தால் இந்த நற்பணி துவங்கி 15 ஆண்டுகள் ஆகவிருப்பதால் அதை முன்னிட்டு இனி வரும் ஒவ்வொரு பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பிறந்தநாள் நாட்களுக்கு அவர்களின் கையால் ஒரு மரக்கன்றை நட வைக்கும் முயற்சியை எடுத்துள்ளார். அதற்கு பிள்ளையார் சுழி போட்டு இன்று தொடங்கி வைத்தார் இன்றைய பிறந்தநாள் நாயகரும் தன் படைப்புகள் மூலமாக மண் சார்ந்த நமது பாரம்பரியத்தை தனது படங்களில் காத்திரமாக காட்டி வரும் இயக்குநருமான சீனுராமசாமி அவர்கள்.

இன்று காலையில் சீனுராமசாமி அவர்கள் மகிழ்ச்சியோடு ராயல் பிரபாகர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மரக்கன்றுளை நட்டு வைத்தார். மேலும் நட்டு வைத்த மரக்கன்றுகளை சரியாக பராமரிக்கவும் தக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார் ராயல் பிரபாகர். ஏன் என்றால் மரம் நட்டுவைத்து அது அத்தோடு போகும் பத்தோடு பதினொன்றாக ஆகிவிடக்கூடாது என்பதில் ராயல்பிரபாகர் கவனமாக இருக்கிறார். அதற்காக அந்தந்த வீட்டு உரிமையாளர்களிடம் தெளிவாகப் பேசியும் வருகிறார் இயற்கையும் கடவுளும் ஒன்றென்பதால் இந்த முயற்சியை ராயல் பிரபாகர் எடுத்திருப்பதாக தெரிகிறது. அவர் மனம் போலவே மரங்களும் வளரட்டும்; மனிதமும் வளரட்டும்!