Tamil Movie Ads News and Videos Portal

செடல்-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

எங்கூர்ல காளியம்மான்னு ஒருத்தங்க இருந்தாங்க. சின்ன வைசுலே சாமிமேல பெரிய பிடிப்புள்ள ஆளு அவிய. மொகம் நிறைய சந்தனமும், அதுக்கு நடுவே ஒத்த ரூவா சைசுல குங்குமமும் வச்சிருப்பாவ அந்த காளியம்மா..அவங்களுக்கு கல்யாண வாழ்க்கை மேல நாட்டமில்லாப் போயி, காளியம்மனே உலகம்னு இருந்தாங்க. உசுரு அடங்குற வரைக்கும் அவங்களை எங்க ஊரு காளியம்மனாவே பாத்தது. சின்னப்பிள்ளிய ராத்திரி பயந்து அழுதாலோ, பேய்க்கோளாறுன்னு எதுனா இருந்தாலோ..உடனே எங்கூர் ஆள்க்க காளியம்ம வீட்டுக்கு தான் ஓடுவாங்க. அவங்க மொகத்துல தெய்வம் குடியிருந்ததா ஊரே நம்பிச்சிது. . காளி புள்ளன்னு பேரெடுத்த காளியம்மா எங்களுக்கு தாய்மாதிரி இருந்தாவ..

இந்த நாவல்ல அப்படியொரு சாமி புள்ளயா வர்றா செடல். ஆனா அவா விருப்பப்பட்டு இந்த வாழ்க்கைக்குள்ள வரல. கூத்தாடிக் குலத்துல, வயித்துக்கு வழி இல்லாத அம்மா அப்பாவுக்கு எட்டாவதா பொறக்குறா செடலு..அவா வளந்து வந்த நேரம் ஊர்ல கொள்ளேத்த பஞ்சம். மழை ஏன்னு கேட்க கூட அந்தூரை எட்டிப் பாக்கல. அப்பம் ஊர் கூடி ஒரு முடிவெடுக்கு. இந்தச் செடலு பிள்ளைய பொட்டுக்கெட்டி வுட்டு சாமி புள்ளயா ஆக்கிப்புடுவும்னு. அப்பனும் ஆத்தாளும் கதறுனாலும் பலம் கூடுன சாதிவ முன்னாடி பாவப்பட்ட சாதிவ என்ன பண்ண முடியும்? முடிவில விவரம் தெரியாத பச்சப் பிள்ள செடலுக்கு பொட்டுக்கெட்டி விடுதாங்க. பொட்டுக் கெட்டி விடுத பிள்ளைக்கி கல்யாணங்காட்சின்னு ஒண்ணும் கிடையாது. கோயிலை கூட்டிப் பெறக்கணும். திருநாள் டைம்ல விரதம் இருந்து சாமிக்கு தாலாட்டு பாடணும். அரிசி தானியம்னு ஊர் போடுத எச்ச மிச்சத்த வாங்கி வயிறு வளக்கணும்.

எட்டு வைசு செடலை கோயில் கிட்டே ஒரு கிழவி கூட தங்க வைக்காங்க. தாய் தவப்பன் பஞ்சம் பொழைக்க நாடு கடந்து போக கிழவி கூட கெடந்து வளருதா செடலு. அவளுக்குப் பொட்டுக்கெட்டி விட்ட நேரம் ஊர்ல மழை பெய்யிது. ஊரு செழிக்கி. செடலு? கூட கிடந்த கிழவி செத்துப்போக, ஒருநாளு அடிச்சிப் பெய்த மழையில பெரிய மனுசி ஆயிடுறா . தொடையிடுக்குல வார ரத்தத்தை தொடக்கயும் ஆளுல்லாம ஒவ்வொரு வீடா போய் கதவைத் தட்டுதா. “பறச்சிக்கிம் கீழானவ கூத்தாடிக்காரி. ஒன்ன எப்டி வீட்டுக்குள்ள சேக்க”ன்னு ஊரு ஒதுக்குது. கண்ண அவிஞ்சி போன சாமியும் கண்ண மூட, உடுமாத்த துணியில்லாம, கிழவி இருந்த வீடும் மழையில இடிஞ்சி விழ நொடிஞ்சி போன செடலு, பொன்னன் என்ற ஒரு கூத்தாடி கூட ஊர் விட்டு போறா. அதுக்குப் பிறவும் அவ வாழ்க்கப்பாடு சுபமா முடியல.

“உசுருன்றது வயிறுல தான் இருக்கு” ன்னு எழுதிருக்கார் இமையம். இந்த நூல்ல வர்ற பொன்னன், விட்டம், வனமயில், கிழவின்னு எல்லாரும் வயித்துக்குள்ள உசுரை வச்சிருக்க ஜீவனுங்க. இவங்கட்ட ஒட்டிருக்க அறம், கண்ணீரு, துன்பம், துயரம் எதையும் மேல்சாதின்னு சொல்ற யாரும் மசுருக்கும் மதிக்கல. இந்திய சமூகம், தமிழ்ச்சமூகம் பண்பாடு பாரம்பரியம்னு பீத்துற விசயத்துக்குள்ள அடங்கிக் கிடக்கு கடலைத் தாண்டிய பொம்பளைவ கண்ணீரு. அதுக்கு இந்த நாவல் நல்ல ஆதாரம் செஞ்சிருக்கு. இமையத்தோட கதைவ நாம பாக்காத..பாக்க நினைக்காத, பாத்தாலும் பாக்காத மாதி காட்டிக்கிற மக்களைத் தான் பேசுது. அதுல இருக்குற உண்மைவ நம்மைச் சுடுது. சுடணும். அந்தச் சூடு நிச்சயமா நமக்கு வேணும்.. இந்தச் செடலு நானும் ஒரு பொட்டப்பிள்ளைக்கி தவப்பன்றதால நெஞ்சை பலமா சுட்டா