”சரித்திரக்கால மலையாளத்தில் தமிழ்வார்த்தைகள் அதிகம்” – மம்முட்டி
மலையாளத்தில் பத்மகுமார் இயக்கத்தில் வேணு குணப்பள்ளி தயாரிப்பில் மம்முட்டி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “மாமாங்கம்”. உன்னி, இனியா, கனிகா, பிராச்சி தெஹ்லான், சித்தாரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். கும்பகோணத்தில் நடக்கும் மகாமகம் நிகழ்வைப் போல கேரளாவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மாமாங்கம் நிகழ்வின் சரித்திரக் காலப் பிண்ணனியை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. தமிழ் வசனங்களை இயக்குநர் ராம் எழுதியிருக்கிறார். இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி, “இப்படத்தை தமிழில் டப் செய்ய அதிகம் சிரமம் ஏற்படவில்லை. ஏனென்றால் சரித்திரகால மலையாளத்தில் தமிழ் வார்த்தைகள் அதிகம் என்பதால் பல வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியிருக்கிறோம். பிற வார்த்தைகளை தமிழில் மாற்ற இயக்குநர் ராம் பெரிதும் உதவினார். இந்த மாமாங்கம் திரைப்படம் சரித்திரக் கால நிகழ்வுகளை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.” என்று பேசினார்.