ஒரு நொடியில் நம்மை சீர்குலைக்கும் அதிகாரத்தை சட்டப்படியேறி சீர் செய்ய வேண்டும். அதில் முடியாவிட்டால் ஒரே அடியில் நேர் செய்ய வேண்டும் என்ற நெத்திப்பொட்டு கன்டென்டோடு வந்திருக்கிறது சங்கத்தலைவன் படம். பாரதிநாதன் எழுதிய தறியுடன் என்ற நாவல் தான் வெற்றிமாறன் தயாரிப்பில் மணிமாறன் இயக்கத்தில் படமாக வெளியாகியுள்ளது. நாவலில் உள்ள காத்திரமான உணர்வை திரையில் அப்படியே கொண்டு வருவதென்பது பெரும் கலை. அது தமிழ்சினிமாவில் வெற்றிமாறனுக்கு மட்டுமே சாத்தியப்பட்டது என்று சொல்லலாம். (விசாரணை, அசுரன்)
தற்போது அந்த இடத்தை நோக்கி ஸ்ட்ராங்கான ஓர் அடியை எடுத்து வைத்துள்ளார் மணிமாறன். படத்தின் கதையை விடுங்கள். தறி நெய்யும் மனிதர்களை திரையில் நம் மனம் நெய்ய விட்டு அசத்தி இருக்கிறார் இயக்குநர்.
முதலாளிகள் முதலில் லாபத்தை முன் வைப்பார்கள் .கருணைய பின் வைப்பார்கள் என்பதே இன்றளவும் உண்மை. இதையெல்லாம் யார் கேட்பார்? என்ற அவர்களின் அடாவடித்தனத்திற்கும் மெத்தனத்திற்கும் அரசும் துணைபோகிறது என்பதால் தான் தொழிலார்கள் அட்டைகளின் இரையாக இருக்கிறார்கள்.
இதை கேள்வி கேட்பவர்களின் எண்ணிக்கை ஒற்ற இலக்கத்தில் இருந்து லட்சம் இலக்கமாக மாற வேண்டும். அப்போது தான் உழைப்பவனுக்கு சரியான கூலி செல்லும் என்பதையும், ஓர் அளவைத் தாண்டும் போது முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்ற நிதர்சனத்தையும் படம் பேசியுள்ளது.
படத்தில் சங்கத்தலைவனாக சமுத்திரக்கனி புரோமோட் செய்யப்பட்டாலும் நிஜமான சங்கத்தலைவன் கருணாஸ் தான். இயலாமையை முகத்தில் கொண்டு வரவேண்டுமானால் கொஞ்சமாவது அது மனதில் படிந்திருக்க வேண்டும். அதற்கு உடலும் பழக்கப்பட்டிருக்க வேண்டும். அதை அநாயசாமாக செய்திருக்கிறார் மனிதர். இரண்டு இடங்களில் கண்ணில் நீர் கட்டியதற்கு கருணாஸே காரணம். சமுத்திரக்கனி கேரக்டர் ஸ்கெட்ச், நச்! ரம்யா சோனுலக்ஷ்மி என படத்தில் இரு சங்கத்தலைவிகள். நிதானமாக நம் மனதுக்குள் வந்து படம் முடிவில் அழகாக அமர்ந்து கொள்கிறார்கள்.
வர்க்கத்தைப் பேசிய அளவு சாதியத்தை படம் நேரடியாக பேசவில்லை. ஆனால் சமுத்திரக்கனி கேரக்டர் வாழுமிடம், ராமதாஸ் பேசும் தோரணை, சமுத்திரக்கனி கருணாஸ் இருவரும் அமர்ந்து பேசும் காட்சியில் உணர்த்தப்படும் ஓர் விசயம் என நிறைய இடங்களில் மறைபொருளாக சாதியைத் தொட்டிருக்கிறார்கள்.
முன்பாதியில் கூடிவந்த நேச்சுரல் பின்பாதியில் சற்று இடறி இருந்தாலும் சங்கத்தலைவனை தவறவிடக்கூடாது!
-மு.ஜெகன்சேட்