Tamil Movie Ads News and Videos Portal

சங்கச் சித்திரங்கள்-ஒரு புத்தகம்/ ஒரு பார்வை

ஓர் அவமானத்தை ஓர் இளவெயில் போக்க முடியுமானால், ஓர் இழப்பை ஒரு மென்மழை மறக்கச் செய்ய முடியுமானால், ஒரு நோயைப் பூவின் நறுமணத்தால் சமன் செய்துகொள்ள முடியுமென்றால், வாழ்க்கையில் அஞ்சக்கூடியதாக ஏதுமில்லை” பேராசான் ஜெயமோகன் எழுதியிருப்பவை மேலுள்ள வரிகள். புறநானூறில் நன்கணியார் பாடியுள்ள பாடலுக்கு பேராசானின் விளக்கம் இப்படி முடிகிறது. “இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தாரே” என்ற இறுதி வரிகளோடு முடியும் நன் கணியாரின் பாட்டு. வாழ்வின் இருபக்கங்களில் சுப பக்கங்களை மட்டுமே பார்க்கும் பாக்கியம் வாய்த்தால் எப்படியிருக்கும்? மேலும் எத்துன்பத்திலும் இன்பம் கண்டடைய முயல்வது துன்பம் கடக்கும் தோணியைச் செய்வதாகும்.

ஜெ.மோ எழுத்து தான் எத்தனை அற்புதம் வாய்ந்தது. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறது தொல் காப்பியம். ஆனால் ஒரு சொல் நமக்குள் எப்படி விரவி வந்தால் நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்? அந்தச் சொல்லின் பொருளை விட அந்தச் சொல்லின் தன்மையும் உண்மையும் அல்லவா நன்மை விளைவிக்கும்.
உறுதியாகச் சொல்லலாம். இந்தச் சங்கச்சித்திரங்கள் நன்மை விளைவிக்கும் நூல்

ஜெ.மோ எழுதி 2013-ல் வந்த இந்த நூல் நிச்சயமாக ஒரு மாஸ்டர் பீஸ் என்பேன். சங்கப்பாடல்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து அந்தப்பாடல்களின் கருத்தோடு ஒன்றிய தான் கண்ட வாழ்ந்த அனுபவங்களை கோர்த்து பெரும் கொடையாக தமிழ்ச்சமூகத்திற்கு கையளித்துள்ளார் பேராசான்

காதல் திருமணம் செய்துகொண்ட ராதா என்பவர் தன்னைப் பசியோடு தேடிவந்த அம்மாவுக்கு கணவன் வருவதற்குள் 50 ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற பரிதவிப்புக்கு சங்கப்பாடலில் வரிகள் உண்டு

கடிகார முள்ளின் சத்தம் கூட தன் இறந்து போன காதலியை நினைவூட்டுகிறது ஒருவருக்கு

வாத்தியாரை காதலித்து மளிகைக்கடைக்காரருக்கு வாக்கப்பட்டு இருபது வருடம் கழித்து கழுத்து நிறைய நகைகளோடு வந்து தன் மூட்டுவலியின் கதை சொல்லும் கெளரி அக்காவின் கதையில் இருக்கிறது ஒரு காதல் பாடல்

இப்படி சங்கப்பாடல்களின் மூலம் வந்துபோகும் மனிதர்களையும் கதைகளையும் வாசிக்கும் போது நாம் கடந்து வந்த வாழ்வை கனெக்ட் செய்து உறக்கம் தொலைக்க வைத்தது நூல்

மேலும் பல இலக்கியச் சுவைகளையும் அள்ளித்தெளித்துள்ளார் ஜெ.மோ

“செம்புலப் பெயர் நீர்போல அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே” என்ற பாடலுக்கான விளக்கத்தை சாமிநாத அய்யர் வேறு மாதிரி எழுதியுள்ளார். அதைப்பற்றிய கட்டுரை அதி மதுரச்சுவை🥰

“செம்புலம் என்றால் பாலைவனம். சாலையில் பெய்யும் மழைக்கும் பாலையில் பெய்யும் மழைக்கும் வித்தியாசம் உண்டு. எப்பவாது மழை பார்க்கும் பாலை, அந்தப் பாலைவனம் மழையை உள்வாங்கும் அன்பை இயற்கை தான் அறியும். எப்பவாது நடைபெறும் கூடலில் இருசாராரும் கொள்ளும் வேட்கையும் கூட்டும் அன்பும் சொல்லில் அடங்காதது தானே! அப்படித்தான் மண்ணும் மழையும் பிரித்தறிய முடியாமல் பிணைந்து கொள்கிறது❤️❤️ எனக்கும் இந்த நூல் இப்படித்தான் இருக்கிறது💯