எண்பது, தொண்ணூறுகளில் மக்கள் நாயகன் என எளிய மக்களின் முகமாக அறியப்பட்டவர் நடிகர் ராமராஜன். தொடர்ந்து வெள்ளி விழாப்படங்களை கொடுத்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. இவரது வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்தவர் இசைஞானி இளையராஜா.
தற்போது இவர்கள் இருவரும் 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்துள்ளனர். இப்படி ஒரு அபூர்வ கூட்டணியை மீண்டும் இணைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இயக்குநர் R.ராகேஷ். இவர் இதற்கு முன்னதாக தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கியவர்.
இந்த படத்தை எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்தநிலையில் புத்தாண்டை முன்னிட்டு தயாரிப்பாளர் V.மதியழகன் இயக்குநர் R.ராகேஷ் ஆகியோருடன் சென்று இசைஞானி இளையராஜாவை சந்தித்து தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மக்கள் நாயகன் ராமராஜன்.
இந்த சந்திப்பின்போது படப்பிடிப்பு குறித்து பல விவரங்களை இசைஞானி இளையராஜா கேட்டு அறிந்துகொண்டார். இன்னும் நான்கு நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது என இயக்குநர் ராகேஷ் கூற, மொத்த படமும் முடிந்ததுமே தன்னுடைய இசைப்பணிகளை துவங்குவதாக உறுதி அளித்தார் இளையராஜா.
இசைஞானி இன்னும் பாடல்கள் கொடுக்காத நிலையிலேயே ஒரு பாடலுக்கான காட்சிகளை படமாக்கிவிட்டு வந்ததாக இயக்குநர் ராகேஷ் கூற ஆச்சரியப்பட்டு போனார் இளையராஜா. அப்போது அவரிடம் இதுவரை எங்களுக்காக ஒரு லட்சம் பாடல்கள் தந்து இருக்கிறீர்கள்.. அதில் ஒரு பாடலை வைத்து கதைக்குப் பொருத்தமான காட்சிகளை படமாக்கி விட்டோம் என்று கூற அவர்களை பாராட்டியுள்ளார் இளையராஜா.