சல்மான்கான் உடன் இணையும் பரத்
’பாய்ஸ்’ ‘காதல்’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் பரத், சமீபகாலமாக பட வாய்ப்புகள் ஏதும் பெரிதாக அமையாததால் வெளியாகும் திரைப்படங்களில் அவரின் முகம் தென்படவில்லை. தற்போது அவர் ஹிந்தியில் பிரபுதேவா இயக்கவிருக்கும் படத்தில் நடிகர் சல்மான்கான் உடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் என்கின்ற செய்தி வெளியாகியுள்ளது. மேலும் பரத் சல்மான்கானுடன் இணைந்து எடுத்த புகைப்படத்துடன் ‘நம்பிக்கையோடு காத்திருந்தேன். அந்த நம்பிக்கைக்கு நல்ல பதில் கிடைத்திருக்கிறது. சல்மான்கானுடன் நடிப்பது என்பது என் கனவு. அது நிறைவேறியிருக்கிறது. அந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த இயக்குநர் பிரபுதேவாவுக்கு என் நன்றி” என்கின்ற செய்தியையும் அவர் வெளியிட்டிருக்கிறார். தற்போது சல்மானை வைத்து தபாங் 3 படத்தை இயக்கி வரும் பிரபுதேவா அடுத்தும் சல்மானை ‘ராதே’ என்கின்ற படத்தில் இயக்குகிறார். இப்படத்தில் தான் பரத் சல்மானுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.