‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சமூகத்தில் புரையோடியிருக்கும் சாதியம் மீதான பற்றையும், அதன் குரூரம் கலந்த வன்மத்தையும் காட்சிப்படுத்தியதன் மூலம், நம் மனதின் அடியிழையில் புதைந்திருக்கும் மனிதத்தை சற்றே அசைத்துப் பார்த்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதோடு,
படம் அப்பகுதிகளில் நிகழும் சாதியச் சண்டைகளை மையப்படுத்தி கதை சொல்லவிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு வாலிபர் தன்னை சீவலப்பேரி பகுதியை சேர்ந்தவராகக் கூறிக் கொண்டு, ‘எங்கள் சமுதாயத்தை பற்றி அவதூறாகப் படம் எடுத்தால் உங்கள் தலை இருக்காது; வெட்டி கொலை செய்வோம்’ என்று அப்பட்டமாக மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப் வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது திரைத்துறை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.