Tamil Movie Ads News and Videos Portal

சான்றிதழ்- விமர்சனம்

ஊரை திருத்தணும்னு காரை எடுத்தவன் பெட்ரோல் வேணும்னு திருடப்போன கதையாக..மெசேஜ் சொல்கிறேன் என்ற பெயரில் சான்றிதழ் செய்துள்ள செய்கை என்னவென்றால்…

திண்டுக்கல் மாவட்டத்தில் கருவறை என்ற கிராமம். ஒழுக்கமும், அழுத்தமுமா இருக்கிற அந்த கிராமத்திற்கு ஜனாதிபதியே வந்து விருது தர்றார். எப்படி அந்த ஊரு இப்படி ப்யூர் வெஜ் ஆக இருக்கிறது என்பது தான் படத்தின் கதை. அந்தக் கதை படத்தின் பின்பாதியில் தான் வருகிறது. அப்ப முன்பாதியில் கதை இல்லையா? என்று கேட்டால் அதற்கு கம்பெனியில் பதிலில்லை என்பதே பதில்

நடிகர்களின் லிஸ்டை எடுத்தோமானால், ஹரிகுமாரில் துவங்கி, கதிர் வரை அனைவருமே தேவையை விட அதிகமாகவே நடித்துள்ளனர். அது அவர்களின் பிழையல்ல என்று சொல்ல முடியாது. குறிப்பாக ரவிமரியா காமெடி என்ற பெயரில் பேசும் தொனியும் செய்யும் முக சேஷ்டைகளும் நம்மை நாட்டை விட்டு ஓட வைப்பவை. மறைந்த மனோபாலா படத்தில் ஆங்காங்கே வந்து செல்கிறார். மனைவியை வைத்தும், கணவனை வைத்தும் எழுதப்பட்டுள்ள காமெடிகள் எல்லாம் கற்பனை வறட்சி மற்றும் அபத்தம்

இசை பாடல்கள் என இரண்டுமே நம்மை வருத்தத் தவறவில்லை. ஒரு மெலொடி பாடலில் மட்டும் வரிகள் நன்றாக இருந்தது. ஒளிப்பதிவில் ஓரளவு நேர்த்தி இருந்தது ஆறுதல். எடிட்டர் இன்னும் கத்திரியை கூர்படுத்தியிருக்கலாம்

ஒரு நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும் என முடிவெடுத்த இயக்குநர் ரசிகனின் ரசனையை மனதில் வைத்து திரைக்கதை அமைத்திருக்கலாம். காட்சிகள் மட்டும் விதவிதமாக வருகிறதே தவிர, கதை நகரவே இல்லை. வெறும் காட்சிகளின் தொகுப்பாகவே படம் நம்மை கடந்து போகிறது. துளியும் தாக்கத்தை ஏற்படுத்தாத இந்தப்படம் இயக்குநரின் சினிமா ஏக்கத்தை வேண்டுமானால் தீர்த்திருக்கலாம். மற்றபடி நமக்கு.. No comments🙏

-மு.ஜெகன் கவிராஜ்