Tamil Movie Ads News and Videos Portal

ராஜாக்களின் கூட்டணியில் உருவாகும் சாமானியன்!

எண்பது மற்றும் தொண்ணூறுகளில் “மக்கள் நாயகன்” என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன்.கிராமிய மணம் சார்ந்த படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனதை தனது யதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர்.இந்த 45 வருடங்களில் தான் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள பெருமை கொண்ட ராமராஜன், தற்போது ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

உடன் நடிகர் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் இணைநாயகர்களாக நடிக்கின்றனர். ‘தம்பிக்கோட்டை’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ உள்ளிட்ட படங்களை இயக்கிய R. ராகேஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார்.வித்தியாசமான கதையம்சம் கொண்ட, அதேசமயம் தரமான படங்களைத் தயாரிக்கும் ‘எட்செட்ரா என்டர்டெய்ன்மெண்ட்’ சார்பில் V.மதியழகன் இந்த படத்தைத் தயாரித்து வருகிறார்.’சாமானியன்’படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மணிமகுடத்தில் வைரம் சூட்டியது போல இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜா தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். எப்போதுமே ராமராஜனையும் இளையராஜாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. ராமராஜன் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்து, அவரது வெற்றிக்கு துணைநின்று காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்துள்ளார் ராஜா. இன்னும் சொல்லப்போனால் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக பல வெற்றிப் பாடல்களை ராமராஜனுக்கு இசைத்துள்ளார் மேஸ்ட்ரோ.

தற்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிப்பிற்குத் திரும்பியுள்ள ராமராஜனின் படத்திற்கு இசைஞானி இசையமைப்பதை விட பொருத்தமான அம்சம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?இந்தப்படம் தொடர்பாக நேற்று மேஸ்ட்ரோ ராஜாவை நேரில் சந்தித்து பேசினார் ராமராஜன். அப்போது ராஜாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நெகிழ்ந்தபடி மனம்விட்டு பேசிய ராமராஜன், நான் பல வருடங்கள் கழித்து நடிப்பிற்குத் திரும்பி உள்ளேன்.
“இந்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைக்க வேண்டும்” என உரிமையுடன் கேட்க, இளையராஜாவும் அதற்கு மனப்பூர்வ சம்மதம் தெரிவித்துள்ளார்.

#SAAMANIYAN #சாமானியன்