Tamil Movie Ads News and Videos Portal

சாலா- விமர்சனம்

வடசென்னை பின்புலத்தில் மதுக்கடை சார்ந்த ஒரு கேங்க்ஸ்டர் கதை இந்த சாலா

வடசென்னை அருள்தாஸின் வலது கையாக இருக்கிறார் ஹீரோ தீரன். அவருக்கு நேர் எதிராக ஒரு கேங். இரு கேங்கிற்கும் எதிராக, ‘மதுக்கடை வேண்டாம்’ என நீண்ட பிரச்சாரம் செய்துவருகிறார் ஹீரோயின் ரேஷ்மா. பார்வதி பார் என்ற மதுக்கடையை திறக்க முட்டி மோதும் இந்த கேங் வார், யாரையெல்லாம் வாரித்தின்றது? என்பதே சாலாவின் கதை

அறிமுக கதாநாயகன் தீரன் நல்ல வீரதீரமுள்ள உடலோடு காட்சியளிக்கிறார். சண்டைக்காட்சிகளில் அவர் பத்திருபது பேர்களை அடிப்பது எல்லாம் நம்பும் படியே இருக்கிறது. நடிப்பதில் இன்னும் பயிற்சி செய்தால் சாலிடாக நல்ல ஆக்டராக வருவார். ரேஷ்மா மதுக்கடைக்கு எதிராக போராடும் டீச்சராக வந்து கவனம் ஈர்க்கிறார். அருள்தாஸ் நெஞ்சில் நிற்கும் நல்ல ரோலில் சிறப்பாக நடித்துள்ளார். சார்லஸ் வினோத், ஸ்ரீநாத், சம்பத் ராம் என மற்ற சில கேரக்டர்களும் கவனம் ஈர்க்கிறார்கள்.

தீசன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பரவாயில்லை ரகம். ரவீந்திரநாத் குரு தன் கேமராவால் வடசென்னையை தத்ரூபமாக காட்டியுள்ளார். சண்டைக்காட்சிகளில் அவர் அதிகம் மெனக்கெட்டு பிரேமிங் வைத்துள்ளார். எடிட்டர் ஷார்ப்பாக உழைத்துள்ளார்

படத்தில் நல்ல கருத்தைச் சொல்ல வருகிறார்கள். ஆனால் அந்தக் கருத்து நம்மை வந்து சேர்வதற்குள் நிறைய வன்முறைகளை சகிக்க வேண்டியதுள்ளது. உணர்ச்சிகரமான காட்சிகள் இருந்தும்,இயக்குநர் அதை துல்லியமாக ஸ்டேட்ஜிங் செய்யவில்லை. நல்ல கதை தான். திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் இன்னும் சிரத்தை எடுத்திருந்தால் சாலா சோலாவாக ஜெயித்திருப்பார்
2.75/5
-மு.ஜெகன் கவிராஜ்