ஒட்டு மொத்த உலகையும் தன் கோரப் பிடியில் சிக்க வைத்திருக்கும் கொரோனா தொற்றுக் கிருமியின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது என்றால், அதனால் ஏற்பட்ட இந்த ஊரடங்கு காலத்தில் வதந்திகளும் கொரோனா வேகத்தில் பரவுகிறது. அதில் சமீபத்தில் கிளம்பிய வதந்திகள் அனைத்துமே வைரல் ரகம். இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை தமன்னா, இந்த ஊரடங்கின் ஆரம்ப காலகட்டங்களில் பெரிதாக வலைதளங்களில் வலம் வரவில்லை. உடனே வதந்தி கிளம்பியது. ஈஷா மகாசிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட தமன்னாவிற்கு கொரோனா பரவியது என்று.
தற்போது அவர் மீண்டும் சமூக ஊடகங்களில் உலவத் தொடங்கியதும் வதந்தி வதங்கிப் போயிற்று. அடுத்த வதந்தி சீயான் விக்ரம் நடிப்புக்கு முழுக்குப் போடுகின்றார் என்று கிளம்பியது. ஆனால் அவர் தரப்பில் இருந்து தற்போது ‘கோப்ரா’ ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருப்பதைப் போல் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பேன் என்ற அறிவிப்பு வெளியாகியது. அடுத்த வதந்தியாக, லோகேஷ் கனகராஜ் கமல் தயாரிப்பில் ரஜினியை இயக்கும் படத்தின் கதை விவாதத்தை தொடங்கிவிட்டார் என்றார்கள். அவர் தரப்பில் இந்த சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய காலகட்டத்தில் எப்படி கதை விவாதம்.?? என்று கேள்வி எழுப்பியிருப்பதோடு, ரஜினிகாந்தை இயக்குவது என்பது இன்னும் முடிவாகாத தகவல். இது போன்ற தகவல் எப்படி பரவுகிறது என்றே தெரியவில்லை என்று முழிக்கிறார்களாம். வேறு எப்படி இந்த வதந்திகள் பரவும். கொரோனாவைப் போல் தான். மனிதரிடமிருந்து மனிதருக்கு…!!