“வாழிடமே சிந்தனையை தீர்மானிக்கிறது” என்கிறார் மார்க்ஸ். நமக்குள் உருவாகும் சிந்தனைகளுக்கு நாம் இருக்கும் இடமும் வாழும் சூழலும் முக்கியக் காரணியாக இருக்கிறது. இன்றைய அரசியல் சூழல் சாதிமத காழ்ப்புணர்ச்சி நிறைந்ததாக இருக்கிறது. அதை நீர்த்துப்போக வைத்திட சில எதிர்ப்பாளர்களும் களத்தில் இருக்கிறார்கள். ஒரு கலைப்படைப்பு யாருக்கு ஆதரவாக நிற்கிறது என்பதை விட அது அறத்தின் பக்கம் நிற்கிறதா என்பது தான் முக்கியம். அந்த வகையில் இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ருத்ர தாண்டவம் ஓரளவு அறம் பேசிவிட்டு, மறுபுறம் பெரிய வன்மத்தை கக்கி இருக்கிறது. சினிமாவில் சாதிச்சாயம் மதச்சாயம் இருந்தால் அது சினிமாவிற்கும் கேடு சமூகத்திற்கும் தீங்கு. அந்த இரண்டையும் உரம் போட்டு வளர்க்கிறது இப்படத்தின் கதையும் காட்சிகளும்.
நேர்மையான போலீஸ் அதிகாரி நாயகன் ரிச்சர்டு. கஞ்சா விற்றுவிட்டு தப்பிச் செல்லும் சிறுவனை அவர் எட்டி உதைக்கிறார். பின் அச்சிறுவனை பாவம் பார்த்து வெளியில் விடுகிறார். சில நாட்களில் அச்சிறுவன் இறக்கிறான். அச்சிறுவன் மரணத்திற்கு காரணம் ரிச்சர்டுக்குள் இருக்கும் சாதிய வன்மமே என்பதாக அண்டர் கிரவுண்ட் அரசியல் வாதிகள் கட்டமைக்கிறார்கள். அதனால் அவருக்கு வேலை போகிறது. இழந்த வேலையை எப்படி மீட்கிறார்? விழுந்த பழியை எப்படி துடைக்கிறார்? என்பதே மீதிக்கதை
போலீஸ் அதிகாரிக்கான கம்பீரம் ரிச்சர்டு உடலில் இருக்கிறது. நடிப்பில் இல்லை. எமோஷ்னல் காட்சிகளில் நன்றாகவே தடுமாறுகிறார். வில்லனாக வரும் கெளதம்மேனன், வக்கீல்களாக வரும் ராதாரவி, மாரிமுத்து, ஆகியோர் படத்தின் பெரும் பலம். பின்னணி இசை படத்தில் தாண்டவம் ஆடியிருக்கிறது. ஒளிப்பதிவு சில காட்சிகளில் அசர வைக்கிறது. பல காட்சிகளில் சொதப்புகிறது.
ஒன்லைனாக கேட்கும் போது அழகான ஆக்ஷன் திரில்லர் கதையாக தெரியும் இப்படம், போகிற போக்கில் அறமில்லா நிறைய விசயங்களை செய்துவிட்டுப் போகிறது. PCR act (வன்கொடுமை சட்டப்பிரிவு) சட்டப்பிரிவை பலர் தவறாகப் பயன்படுத்துவதாகச் சொல்கிறது. அதில் உண்மை இருந்தாலும் அதை தவறாகப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு . 10 பேருக்கு பாதகம் இருக்கிறது என்பதற்காக 90 பேருக்கு சாதகமான சட்டத்தை எப்படி மாற்றி அமைக்க முடியும்? மேலும் கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தை நேரடியாக பகடி செய்கிறது படம். ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு முறையாக மாறிவிட்டால் பின் அவர் PC கேட்டகிரியில் வரமாட்டார். அதனால் அவர் வன்கொடுமை சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்ற சட்டவாதம் பக்காவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மதமாற்றத்தை நேரடியாக விமர்சனம் செய்யும் படம், அதே வேளையில், இன்றைய பிரிவினை தீவரவாளர்களுக்கு தீனியும் போடுகிறது. ஒரு படைப்பாளிக்கு எதைச் சொல்லவேண்டும் என்ற தெளிவை விட எதைச் சொல்லக் கூடாது என்ற தெளிவு வேண்டும். வியாபாரிக்கு அந்தத் தெளிவு தேவையில்லை. ஆக இயக்குநர் ஒரு வியாபாரியாக மீண்டும் ஜெயித்திருக்கிறார்.
படத்தின் நீளம் மிகவும் சோர்வாக்கி விடுகிறது. க்ளைமாக்ஸ் முடிந்த பிறகும் ஒரு க்ளைமாக்ஸ் வருவது ஓவர் டயர்டு! ருத்ர தாண்டவம்..ஆடாத காலுக்கு ஆயிரம் மேடை
-மு.ஜெகன் கவிராஜ்