இயக்குநர் இராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் பாடலாசிரியராக மட்டுமின்றி அதன் வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வரும் மதன் கார்க்கி படம் குறித்துப் பேசும் போது, “சுதந்திரப் போராட்ட காலத்தில் தெலுங்குப் பகுதிகளில் குமரம் பீம் மற்றும் அல்லூரி ராமராஜு இருவரும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பெரும் படை திரட்டி போராடி வந்தவர்கள். ஆனால் ஒரு காலகட்டத்தில் அவர்கள் காணாமல் போனார்கள். அவர்கள் பற்றிய தகவல்கள் வரலாற்றுப் பக்கங்களில் கூட இல்லை. ஒரு வேளை அவர்கள் இருவரும் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து இருந்தால் எப்படி இருக்கும் என்கின்ற புனைவு தான் ஆர்.ஆர்.ஆர். இதில் வரலாறும், புனைவும் சரிவிகிதமாக கலந்துள்ளது. படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் நாட்டுப்பற்றை உணரும் விதத்தில் காட்சிகள் கையாளப்பட்டிருக்கிறது..” என்று கூறியுள்ளார்.