நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார்.
ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, கார்த்திக் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசப்பசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி, கார்த்திக், கவிஞர் செந்தமிழ்தாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இப்படம் வரும் டிச-29ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை விஜயா போரம் மாலில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினார்களாக தயாரிப்பாளர் டி.சிவா, பின்னணி பாடகிகள் சுஜாதா மோகன், ஸ்வேதா மோகன், நடிகைகள் வசுந்தரா, ஜித்தன் ரமேஷுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்ற நடிகர்கள் ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, சோமசேகர், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா மற்றும் நடிகை கோமல் சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் டி.சிவா மற்றும் நடிகர் ஆரி இருவரும் இந்தப்படத்தின் இசையை வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் நடிகர் ஆரி பேசும்போது, “இந்த விழாவில் எல்லா பாடகர்களையும் அழைத்து கவுரவப்படுத்தி இருக்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக மலையாள இசையமைப்பாளர் அவுசப்பச்சன் சினிமாவிற்கு வந்தே 50 வயது ஆகிவிட்டது. ஆனால் அவ்வளவு இளமையான இசையை கொடுத்திருக்கிறார். அவர் உடம்புக்கு தான் வயதாகி இருக்கிறது. இசைக்கு வயதாகவில்லை. நெடுஞ்சாலை சமயத்தில் அபிலாஷ் என்னிடம் ஒரு முறை கதை சொல்ல வந்தார். அப்போது இருந்து நல்ல பழக்கம். பின்னர் சில வருடங்கள் கழித்து தபால் அலுவலகம் மூலமாக சேமிப்பு கணக்கு துவங்கலாம் என்கிற பிரச்சாரத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவில் முன்னெடுத்த போது அங்கே எனக்கு உறுதுணையாக நின்று உதவிகளை செய்தவர் அபிலாஷ்.
ஜித்தன் ரமேஷுக்கு முன்னாடியே என்னிடம் இந்த கதையை அவர் சொல்லி இருக்கிறார். ஹீரோவாக நடித்து தோத்தவன் இருக்கிறான். ஆனால் வில்லனாக நடித்து தோத்தவன் யாரும் இல்லை. வில்லனாக காலடி எடுத்து வச்சிருக்கீங்க. இந்த சினிமா உங்களை நிச்சயம் உயரத்துக்கு கொண்டு போய் வைக்கும். நானும் அடுத்த வருடம் வெளியாகும் ஒரு படத்தில் உங்களை போலவே ஒரு வில்லனாக நடித்திருக்கிறேன்.
அதேபோல இந்த மழை வெள்ள காலத்தில் அறந்தாங்கி நிஷா, கே பி ஒய் பாலா ஆகியோர் செய்த உதவிகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோருமே பெரிய நடிகர்கள் உதவி செய்தால் மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள். உதவி செய்தவர்கள் யாராக இருந்தாலும் கொடுத்தவர்களை கொண்டாட வேண்டும் அவர்களும் ஹீரோதான். தயாரிப்பாளர் அமர் ஒரு சாமானியனாக இருந்து மருத்துவராகி சினிமா கனவுடன் 5 படங்களை எடுத்து அதை ரிலீஸ் செய்தும் இருக்கிறார் என்றால் எந்த அளவிற்கு சினிமா மீது அவருக்கு ஆர்வமும் கடின உழைப்பும் இருக்கும் என்பது தெரிகிறது” என்று கூறினார்.