பட்டாஸ் படத்தின் ரிலீஸ் தேதி? அதிகார பூர்வ அறிவிப்பு.
பாரம்பரியம் மிக்க திரைப்பட நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிக மிக ராசியான மாதம் ஜனவரி என்று கூறலாம். 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் , அஜித் குமார் நடிப்பில் வந்த “விசுவாசம்” படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இதை நிரூபித்த சத்யஜோதி நிறுவனத்தினர் 2020 ஜனவரி 16 ஆம் தேதி அன்று தங்களது அடுத்த பிரம்மாண்டமான படைப்பான “பட்டாசு” திரைப்படத்தை திரையிட உள்ளனர். அசுரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் புகழின் உச்சத்தில் இருக்கும் தனுஷ் நடிப்பில் , ஆர் எஸ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவான “பட்டாசு” motion போஸ்டர் மிக குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளத்தில் கோலோச்சியது.
“எங்கள் நிறுவனத்தின் அடிப்படை கோட்பாடே குடும்பத்தோடு படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஏற்ற படங்களை வழங்குவதுதான். பல வருடங்களாக இந்த கோட்பாடை தான் கடைப்பிடிக்கிறோம். உற்றார், உறவினர் என்று கூடி மகிழும் ஒரு பண்டிகை மாதம் ஜனவரி. எங்கள் நிறுவனத்தை பொறுத்த வரை கடந்த வருடம் ஜனவரி மாதம் வெளி வந்த “விஸ்வாசம்” மாபெரும் வெற்றியை தந்தது என்றால் , வரும் ஜனவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளிவரும் “பட்டாசு” மீண்டும் ஒரு பெரும் வெற்றியை தரும் என நம்புகிறோம்.தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி , எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் உள்ளது இப்படம். மிக ஜனரஞ்சகமான , கதை கனமான ஒரு படத்தை எங்கள் நிறுவனத்துக்கு வழங்கியதற்கு இயக்குனர் துரை செந்தில் குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். திட்டமிடப்படியே படப்பிடிப்பு நடத்தி , குறிப்பிட்ட நாளில் படம் வெளிவர உழைத்த இயக்குனரும், அவரது குழுவினரும் படத்தின் வெற்றிக்கு வித்திட்டு உள்ளனர்.
தனுஷ் உடனான எங்கள் உறவு மிக மிக ஆரோக்கியமானது. “பட்டாசு’ எங்கள் உறவை மேலும் பலப்படுத்தும். இதுவரை நாங்கள் வெளியிட்டு உள்ள இரண்டு போஸ்டர்கலும் அவரது வெவ்வேறு தோற்றங்களை வெளிக்காட்டி உள்ளது. நடிப்பில் அவர் ஒரு அசுரன் என்ற பாராட்டுக்கு அவர் உரியவர் என்பதை “பட்டாசு”மீண்டும் நிரூபிக்கும்.
நவீன் சந்திரா, சினேகா, நாயகி மெஹரீன் பிர்சாடா, மற்றும் படத்தில் நடித்து இருக்கும் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்களே. விரைவில் ஆடியோ மற்றும் ட்ரைலர் சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் வெளிவரும்.
விவேக் -மெரிவின் இரட்டை இசை அமைப்பாளர்கள் இசையில் , நாங்கள் வெளியிட்ட முதல் சிங்கிள் ” சில் ப்ரோ” மாபெரும் வரவேற்பை பெற்று உள்ளது” என்று பெருமிதத்தோடு கூறினார் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரகாஷ் மப்பு பட தொகுப்பு செய்ய, திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சியில், ஜனனி நடனம் அமைக்க, விவேக் மெரிவின் இசை அமைப்பில் , சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி, ஜி. தியாகராஜன் தயாரிக்க, ஜி சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.