உண்மைச் சம்பவத்தை ஹீரோயிசம் கலந்து கொடுத்தால் அதுதான் ரெபல்
மூணாறு பகுதியில் குறைந்த கூலிக்கு வேலை செய்து வருகின்றனர் தமிழர்கள். அவர்களின் வம்சம் இந்த நிலையில் இருந்து மீள வேண்டுமென்றால் கல்வியைப் பற்ற வேண்டும். அதை உணர்ந்து தமிழ்பிள்ளைகளான ஜி.வி பிரகாஷ், வினோத், பாண்டி ஆகியோர் நன்றாக படிக்கிறார்கள். மேல் படிப்பிற்காக பாலக்காட்டில் உள்ள அரசு கல்லூரியில் சேர்கிறார்கள். அங்கு அவர்களுக்கு இன வெறுப்பு துன்புறுத்தல்கள் நடக்கின்றன. அதைத் தொடர்ந்து சில பிரச்சனைகளும் நீள்கின்றன. ஹீரோ தலைமையில் எல்லாம் எப்படி சீராகின்றன என்பதே படத்தின் திரைக்கதை
கதையின் நாயகனாக தன்னை படத்திற்குள் ஒப்படைத்துள்ளார் ஜி.வி பிரகாஷ். சில இடங்களில் அவர் மாஸ் காட்ட முயற்சித்துள்ளார். நாயகியின் வேடம் இன்னும் கனமாக கதையில் நுழைக்கப்பட்டிருக்கலாம். கருணாஸ் முதற்கொண்டு இன்னும் நிறைய கதை மாந்தர்களைச் சரியாகச் செதுக்கியிருக்கலாம். ஆனாலும் நடிப்பில் யாரும் குறை வைக்கவில்லை என்பதைச் சொல்லியாக வேண்டும்
படத்தின் வேகத்தை அதிகப்படுத்த அதிகமாக உழைத்துள்ளது ஜிவியின் பின்னணி இசை. பாடல்கள் ஓகே ரகம். ஒளிப்பதிவாளர் தன் வேலையில் துளியும் குறை வைக்கவில்லை. சின்னச் சின்ன ப்ராபர்டிகளிலும் ஆர்ட் டிப்பார்ட்மெண்ட் உழைப்பு சிறப்பு
இன வெறுப்பை மூலதனமாக்கும் மனிதத்தன்மையற்ற செயலைப் பேசியுள்ள படம், அதற்கான அவசியத்தை கதையில் இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். முன்பாதியில் சீறிப்பாய்ந்த திரைக்கதை பின்பாதியில் நாயக பிம்பத்தை நோக்கிச் சென்றதால் சறுக்கிவிட்டது. இன்னும் நன்றாக வந்திருக்க வேண்டிய படம். வந்த பின் என்ன செய்வது? சில சமரசமற்ற கருத்துக்களுக்காக மட்டும் தம்ஸப். மற்றபடி அப்செட்
2.75/5
-மு.ஜெகன் கவிராஜ்