தமிழ்த் திரையுலகின் பன்முக அடையாளமாக திகழும் நடிகர் விஜய் ஆண்டனி, தனது சிறப்பான நடிப்பினாலும், தனித்துவமான திரைக்கதை தேர்வுகள் மூலம், மனம் கவரும் திரைப்படங்கள் தந்து, ரசிகர்களின் இதயங்களை வென்றதோடு, வர்த்தக வட்டத்திலும் லாபம் தரும் நடிகராக பாராட்டு பெற்றுள்ளார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அவரின் திரைத்துறை மதிப்பு அடுத்த கட்டத்திற்கு உயர்ந்துள்ளது. மேலும் அவரது திரைப்படங்களுக்கான வணிக வட்டமும் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. அவரது அடுத்தடுத்த பட வரிசைகள் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கும் நிலையில், ரத்தம் என்ற தலைப்பில் திரைப்படத் இயக்குநர் CS அமுதனுடன் (தமிழ்ப்படம் புகழ்) அவர் நடிக்கும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர, இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர-நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பங்கேற்றிருப்பது படத்திற்கு பெரும் மதிப்பை தந்துள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் திரையுலகின் முன்னணி நடிகைகளான மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர் என்பது படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.
இயக்குநர் CS அமுதன் தான் இயக்கிய ‘தமிழ்ப் படம்’ மூலம் மூலம் தென்னிந்தியத் திரைத்துறையில் ஒரு புதிய போக்கை உருவாக்கினார். அவர் இப்போது “ரத்தம்” படம் மூலம் முற்றிலும் புதிய களத்தில் அடியெடுத்து வைக்கிறார், இது ஒரு அரசியல் திரில்லர் படமாக உருவாகிறது. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் ஜெகன் கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு கோபி அமர்நாத், இசையமைப்பாளர் கண்ணன், எடிட்டிங் சுரேஷ், சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார்.
Infiniti Film Ventures சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப், பங்கஜ் போரா & S.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். நடிகர் விஜய் ஆண்டனி இதே தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ‘கொலை’ மற்றும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற மேலும் இரண்டு படங்களிலும் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“ரத்தம்” படத்தின் 40% படப்பிடிப்பு ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டது. படத்தின் எஞ்சிய படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2022 கோடை கால வெளியீடாக இப்படம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.