Tamil Movie Ads News and Videos Portal

கபாலியில் ரஜினி பேசிய அந்த டயலாக்..உருகிய பா.ரஞ்சித்

“நீலம் புரொடக்சன்ஸ்” சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தாயரித்த “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படம் கடந்த 6-ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியிருந்தார். பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இப்படத்தை பெரிதாக கொண்டாடினார்கள். படத்தை வெற்றி பெறச்செய்த ஊடகங்கள் மற்றும் பொது மக்களுக்கு நன்றி சொல்லும் விழா இன்று படக்குழு சார்பாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், லெனின் பாரதி, ரவிக்குமார், ஸ்ரீகணேஷ், கவிஞர் அறிவுமதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்,
இந்நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித் மிகவும் உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது,

“படம் எடுக்கணும் படம் தயாரிக்கணும் என்றெல்லாம் நினைத்து நான் வரவில்லை, காலேஜ் படிக்கிற வரைக்கும். நான் சந்தித்த ஆளுமைகள் தான் என்னைப் படமெடுக்க உந்தினார்கள். “சில்ட்ரென் ஆப் ஹெவன்” போன்ற படங்கள் என்னை ஊக்கப்படுத்தியது. என்னை அழ வைத்த படங்கள் தான் நான் பட்டுக்கொண்டிருந்த வலிகளை படமாக பதிவுசெய்யத் தூண்டியது. நான் யார் என்பதை முதலில் சொல்ல வேண்டும். அதன்பின் என்னை தெரிந்துகொண்டு என்னிடம் மற்றவர்கள் வரவேண்டும் என்று நினைத்தேன். புத்தகங்கள் வாசிக்கிறது பிரச்சனையாக இருந்த காலத்தில் தான் நான் வந்தேன். நான் தாஸ்தாவஸ்கி நாவலைப் படிக்கும் போது ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார். வேலை செய்யும்போது நான் பீப் பிரியாணி சாப்பிடுவதில் நிறைய பேர்களுக்கு பிரச்சனை இருந்தது. அது பெரிய உளவியல் நெருக்கடி. அதை சினிமாத் தளத்தில் பேச வேண்டும் என்று ஆசை கொண்டேன். மாற்று சினிமாவிற்கு மக்களிடம் இருந்து பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அதனால் அவற்றை மக்களுக்கான மொழியில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ரஜினி சாரை படமெடுப்பேன் என்று நினைத்ததே இல்லை. அவர் கபாலி படத்தில் “அம்பேத்கர் கோட் போட்டதுக்கும், காந்தி கோட் போடாத்துக்கும் பின்னாடி அரசியல் இருக்கு” என்று பேசியது நான் சினிமாவிற்கு வந்ததிற்கான பலனை அடைந்ததாக உணர்ந்தேன்.

“பரியேறும் பெருமாள்” படம் எடுக்கும் போது பெரிய பயம் இருந்தது. குறிப்பாக பத்திரிகையாளர்கள் மீது பயம் இருந்தது. அப்படத்தை யாரிடமும் காட்ட வேண்டாம் என்று நினைத்தேன். பிரஸுக்கு காட்ட வேண்டும் என்று முடிவானதும் இன்னும் பயமாக இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் மாரிசெல்வராஜை கட்டிப்பிடித்தார்கள். எனக்கு கைகால்கள் உதறத் துவங்கியது. அந்தப்படம் தந்த உற்சாகம் பெரியது. அந்தப்படம் கமர்சியலாகவும் பெரிய வெற்றிபெற்றது. அந்தப்படம் தான் “குண்டு” படத்தைத் தயாரிக்கும் நம்பிக்கையைத் தந்தது. அதியன் உழைப்பு எனக்குத் தெரியும். இந்த டீம் திறமைமிக்க மனிதர்கள். தகுதி திறமை என்பதை இங்கு கவனிக்கும் விதத்தில் தான் பிரச்சனை இருக்கிறது. இந்தப்படமும் பிரஸுக்கு போட்டுக்காட்டுவதில் பயம் இருந்தது. ஆனால் இந்தப்படத்தையும் பத்திரிகையாளர்கள் கொண்டாடி விட்டார்கள். ரொம்ப சூப்பரான வெற்றியை பிரஸும் மக்களும் தந்தார்கள். வெறும் எதிர்ப்பை மட்டும் காட்டாமல் நல்ல விசயத்தை கொண்டு சேர்ப்பதிலும் பிரஸ் முன்னணியில் இருக்கிறது. சினிமா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஆயுதம். எளிய மக்களிடம் ஒரு விசயத்தை ஈசியாக கடத்த முடியும் என்றால் அது சினிமாவில் தான் சாத்தியம். அப்படியான நல்ல படங்களைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் தந்து கொண்டிருக்கும்” என்றார்.