“ஒரு ஊரில் ஒரு அப்பா இருந்தார். அவருக்கு வரமுறை இல்லாமல் தூங்குற வியாதி இருந்தது. மனைவியை பிரிந்த அவருக்கு ஒரு அழகான பெண் இருந்தாள். அந்தப் பெண்ணுக்கு ஒரு பிரச்சனை வர அப்பா எப்படி காப்பாற்றினார் என்பது தான் ராஜாவுக்கு செக்.
மிகச் சாதாரணமான கதையாக தெரிந்தாலும் இது இன்றைய காலகட்டத்திற்கு எவ்வளவு தேவையான கதை என்பதை படத்தில் காட்டியுள்ள விசயங்களில் உணர முடிகிறது.
சேரனுக்கு நடிப்பில் செக் வைக்கும் படியான காட்சிகள் இருந்தாலும் கடுமையான முயற்சியால் கரையேறுகிறார். சிருஸ்டிடாங்கே சிறப்புத் தோற்றம் போல வந்தாலும் ஒரு காட்சியில் உருக வைக்கிறார். சேரனின் மனைவியாக நடித்துள்ளவரும், மகளாக நடித்தவரும் நல்ல தேர்வு. வில்லன்களான நான்கு இளைஞர்களை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.
இதுதான் கதை என்பது முதலிலே தெரிந்தால் கூட இடைவேளைக்குப் பிறகான சில காட்சிகள் யூகிக்க முடியாதளவில் நகர்வது சூப்பர். பின்னணி இசையும் மகள் பாட்டு ஒன்றும் படத்தோடு நம்மை ஒன்றச் செய்கிறது.
பொல்லாத தொழில்நுட்ப வளர்ச்சியால் பொள்ளாச்சியில் நமது பெண் பிள்ளைகள் பட்ட பாட்டை நாடே அறியும். காதலிப்பது தவறில்லை. ஆனால் அதில் பெண்களின் கவனம் எப்படி இருக்க வேண்டும் என்ற பாடம் எடுப்பதோடு, ஆண் பிள்ளைகள் எப்படி இருக்கக் கூடாது என்ற பாடத்தையும் எடுத்துள்ளதால் ராஜாவுக்கு செக் நல்ல முயற்சி என்றே சொல்ல வேண்டும்.
-மு.ஜெகன்சேட்