திரை மொழியில் தனித்துவம் காட்டுபவர் இயக்குநர் மிஷ்கின். அவரது படங்களில் சில இடங்களில் தெரியும் செயற்கைத் தனம் கூட அவ்வளவு அழகாக இருக்கும். உலக சினிமா ரசிகர்களுக்கு மிஷ்கின் எப்போதும் ஆதர்சம் தான். சைக்கோவில் அவரது திரைமொழி எப்படி வொர்க்கவுட் ஆகி இருக்கிறது என்றால் சைக்கோ ஒரு மாற்று சினிமா என்பதில் மாற்றமில்லை.
இளம்பெண்களை கடத்திக்கொண்டு தலையை வெட்டும் சைக்கோ கொலைகாரினிடம் ஹீரோயின் மாட்டிக்கொள்கிறார். பாரவையற்ற ஹீரோ எப்படி மீட்கிறார் என்பது தான் கதை.
அதை இருட்டில் சொல்லி இருக்கும் மிஷ்கின் தனக்கு வெளிச்சம் காட்ட இளையராஜாவையும் ஒளிப்பதிவாளர் தன்வீரையும் துணைக்கு அழைத்திருக்கிறார். இசையும், ஒளியும் தான் சைக்கோவின் மிளிர் ஏரியா. எந்த இடத்தில் இசை தேவையில்லை என்று தெரிந்தவர் இசைஞானி. அதுதான் படத்தை ஜீவித்திருக்க வைத்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் மனிதன் படத்திற்குப் பின் இப்படத்தில் கவனிக்க வைத்துள்ளார். பெரும்பாலான நேரங்களில் கண்ணாடியும் அவரை காப்பாற்றியுள்ளது. சைக்கோ கேரக்டரில் வரும் ராஜ் நடிப்பில் சைக்கோ ராஜ்ஜியமே நடத்தியுள்ளார். அவரைப் பார்க்கையில் ஏற்படும் பயங்கரம் படம் நெடுக நம்மோடே இருக்கிறது. நித்யாமேனன் அதிதீ ராவ் ஆகிய ஹீரோயின்கள் சரியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளனர். போலீஸ் அதிகாரியாக வரும் ராம் நல்ல நடிப்பு. ஆனால் அவரின் கதாபாத்திரம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும் அது மிஸ்ஸிங்.
எதனால் வில்லன் எல்லாப் பெண்களையும் கடத்தி தலையை வெட்டுகிறான் என்பதற்கான காரணம் தேவையில்லை என்று மிஷ்கின் நினைத்து விட்டார் போல. வில்லன் சைக்கோ அதனால் அப்படிச் செய்கிறான் என்று நாமாகவே புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. சைக்கோவை நியாயப்படுத்தும் விதமாக ஹீரோயின் சொல்லும் மேட்டர் எல்லாம் சல்லி ஏரியா.
ஒருசில காட்சிகளும் குறியீடுகளும் உலகத்தரம். வயது வந்தோருக்கான படம் மட்டும் அல்ல..கர்ப்பணி பெண்கள் காணக்கூடாத படமும் கூட. சிறுசிறு லாஜிக் உறுத்தல் இருந்த போதும் ஒரு வித்தியாச திரை அனுபவத்தை உணர சைக்கோவை தரிசிக்கலாம்!
-மு.ஜெகன்சேட்