சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா
சில தினங்களுக்கு முன்னர் வெளியான ஒரு புகைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேஷ்வலாக ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் உடன் ஒரு வீட்டின் அறையில் உரையாடிக் கொண்டிருந்தார். அப்புகைப்படம் வெளியான உடனேயே அடுத்து சிவகார்த்திகேயன் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறார் என்கின்ற யூகம் கிளம்பியது. அது இப்போது உண்மையாகியிருக்கிறது. ஹீரோ திரைப்படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் சிவா நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு தற்போது “டாக்டர்” என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பிரியங்கா நடிக்கவிருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கேங்க்ஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆக்ஷன் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகும் இப்படத்தில் வினய், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.