தமிழ்சினிமாவில் மர்மம் நிறைந்த கதைகளுக்கு எப்போதுமே தனி மவுசு இருக்கும். அந்த வகையில் பேண்டசி மர்மத்தை கருவாக கொண்டு உருவாகியிருக்கிறது பூச்சாண்டி திரைப்படம்
பழங்கால விசயங்களை ஆராய்ச்சி செய்து வரும் நாயகன் முருகன் மலேசியாவில் மூன்று நண்பர்களை சந்திக்கிறார். அவர்கள் மூலம் மேலும் அமானுஷ்ய விசயங்கள் முருகனை வந்தடைகிறது. முருகன் சந்தித்த மூவரில் ஒருவர் பழங்கால நாணயங்களை சேகரிப்பவர். ஒரு பழைய நாணயம் மூலமாக ஆவி ஒன்றை வரவழைக்கிறார்கள். அதன்பின் படத்தில் அடுத்தடுத்து நடக்கும் அதிரடி திருப்பங்கள் தான் பூச்சாண்டி படத்தின் கதை
முருகனாக நடித்துள்ள மிர்ச்சி ரமணா மிகத்தேர்ந்த நடிப்பை வழங்கி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் பிறர் நடிகர்கள் கண் வைக்கும் அளவிற்கு கண்களாலே மிரட்டி இருக்கிறார். சங்கர் கேரக்டரில் நடித்துள்ள தினேஷ் சாரதி நவரசம் கலந்த நடிப்பில் லைக்ஸை அள்ளுகிறார். கணேசன், மனோகரன் இருவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கேரக்டரை உணர்ந்து பொறுப்புடன் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஹீரோயின் ஹம்சினி பெருமாள் அழகிலும் நடிப்பிலும் எக்ஸ்ட்ரா மார்க் வாங்குகிறார்.
அசலிஷாம் பின் முகம்மது அலி அவர்களின் ஒளிப்பதிவு தனிப்பதிவாக ஒளிர்கிறது. டஸ்டின் ரிடியன் ஷாவின் பின்னணி இசை நல்ல திரில்லர் அனுபவத்தை கொடுத்துள்ளது.
கதையாக எதையும் எடுத்துக்கொள்ளலாம் என்றாலும் அதை திரைக்கதையாக மாற்றுவதில் தான் வெற்றிக்கான சூத்திரம் இருக்கிறது. அதை கச்சிதமாக கையகப்படுத்தி இந்தப் பூச்சாண்டியை வெற்றியாளனாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் ஜேகே விக்கி.
நெளிவு சுளிவுகள் கூடிய கதையோட்டத்தில் இன்னும் கூட சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி ஒரு அட்டகாசமான திரையனுபவம் இந்தப்பூச்சாண்டி
-மு.ஜெகன் கவிராஜ்