Tamil Movie Ads News and Videos Portal

பொன்னியின் செல்வன்- விமர்சனம்

தமிழ் வாசகப்பரப்பில் பெரும் கவனத்தை ஈர்த்த நாவல் பொன்னியின் செல்வன். அந்நாவல் திரை வடிவம் காண்கிறது என்றதும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்கு மணிரத்னம் எந்தளவிற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்?

சோழநாட்டு அரசர் சுந்தரச்சோழர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். அவரின் ஒரு புதல்வன் ஆதித்த கரிகாலன் வடக்கு நோக்கி தம் சோழக்கொடியை பறக்க விட படைகொண்டு பயணிக்கிறார். இளைய மகன் பொன்னியின் செல்வன் இலங்கை சென்று சோழக்கொடியை உயர்த்துகிறார். சுந்தரச்சோழரின் மகள் குந்தவை தந்தையின் அருகிலே மக்கள் நலம் காணும் நல்லவராக இருக்கிறார். இந்லையில் சுந்தரச்சோழரின் கூடவே இருக்கும் பெரிய பழுவேட்டையரின் மனைவி நந்தினி பழுவேட்டையரை ஆட்டுவித்து சோழ சாம்ராச்சியத்திற்குள் குழப்பம் ஏற்படுத்துகிறார். இதை உணரும் ஆதித்ய கரிகாலன் தன் நண்பன் வந்தியத்தேவனை சோழ நாட்டுக்கு அனுப்புகிறார். கூடவே குந்தவையிடம் சில செய்திகளை சேர்க்கும் படியும் சொல்கிறார். வந்தியத்தேவன் பயணம் செய்கிறார். அந்தப்பயணத்தின் முடிவில் என்னென்ன ஆச்சர்யங்கள் என்பதே பொன்னியின் செல்வனின் கதை

சுந்தரச்சோழர்- பிரகாஷ்ராஜ், ஆதித்ய கரிகாலன்- விக்ரம், பொன்னியின் செல்வன்- ஜெயம் ரவி, வந்தியத்தேவன் – கார்த்தி, குந்தவை- திரிஷா, நந்தினி- ஐஸ்வர்யா ராய்,பெரிய பழுவேட்டரையர்- சரத்குமார்

முதன்மை கதாப்பாத்திரங்களான இவர்களின் நடிப்பு தான் பொன்னியின் செல்வனின் யானை பலம். வந்தியத்தேவனின் துள்ளலும் நன்றியுணர்வும், அறவுணர்வும் நாவலில் அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். படத்தில் கொஞ்சம் குறும்புத்தனத்தையும் சேர்த்துள்ளார் மணிரத்னம். கார்த்திக்கு அது அருமையாக பொருந்தியுள்ளது. ஆதித்ய கரிகாலனாக விக்ரம் 100% பொருந்தி ரசிகர்களுக்கு பெருவிருந்து கொடுத்துள்ளார். ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் என யாருமே கூடுதலும் குறைவுமின்றி நிறைவாக நடித்துள்ளனர்

ரவிவர்மனின் ஒளிப்பதிவு பொன்னியின் செல்வனை மீண்டும் பார்க்கணுமே என்ற எண்ணத்தை அதிகப்படுத்துகிறது. ஏ.ஆர் ரகுமான் திரிஷாவும் நந்தினியும் சந்திக்கும் இடத்தில் ஒரு பின்னணி இசை கொடுத்திருக்கிறார் அட அட..அருமை.. மொத்தப்படத்திலும் ஏ.ஆர் ரகுமான் இசை ராஜ்ஜியம் நடத்தியுள்ளார். தோட்டா தரணியின் கலை இயக்கம்,பின்னி பெடலெடுத்துள்ளது. கோட்டை,படைக்களம் துவங்கி, சின்னச் சின்ன மண்பானையில் கூட அத்தனை மெனக்கெடல்

ஒரு மிகச்சிறந்த நாவலை படமாக்க முனையும் போது நாவலில் உள்ள எல்லாவற்றையும் சேத்தெழுத வேண்டிய கட்டாயம் இயக்குநருக்கு வரும். அதை ஓரளவு சரியாக கையாண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் மணிரத்னம். வசனங்களில் ஜெயமோகன் காரியம் சாதித்திருக்கிறார். முதல் பாகம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது
4/5

-மு.ஜெகன் கவிராஜ்

#PonniyinSelvan1 #பொன்னியின் செல்வன்